600 ஆண்டுகளுக்கு முன்பு தலைநகராக ராயக்கோட்டை : கல்வெட்டு கண்டுபிடிப்பு

600 ஆண்டுகளுக்கு முன்பு தலைநகராக ராயக்கோட்டை : கல்வெட்டு கண்டுபிடிப்பு
X

600ஆண்டு பழமையான கல்வெட்டு 

600 ஆண்டுகளுக்கு முன்பு 30 கிராமங்களின் தலைநகராக ராயக்கோட்டை இருந்ததற்கான கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 600 ஆண்டுகளுக்கு முன்பு 30 கிராமங்களின் தலைநகராக ராயக்கோட்டை இருந்ததற்கான கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று தேடல் குழு அமைப்பாளர் அறம் கிருஷ்ணனின் அழைப்பின் பேரில், உள்ளுகுறுக்கி அருகே உள்ள நல்லரானப்பள்ளியில், நடுகல் ஒன்று கோவில் கல்வெட்டுடன் இருப்பதாக கூறியதன் அடிப்படையில் அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் ஆய்வு மேற்கொண்டார்.

இது குறித்து அவர் கூறுகையில், 'கடந்த 1418ம் ஆண்டு பொறிக்கப்பட்டுள்ள இக்கல்வெட்டு விஜயநகர மன்னர் முதலாம் தேவராயன் காலத்தைச் சேர்ந்ததாகும். என்றாலும் இதில் மன்னர் பெயர், அவரது ஆட்சியாண்டு எதுவும் குறிப்பிடப்படவில்லை. இக்காலத்தைச் சேர்ந்த வேறுசில கல்வெட்டுக்களிலும் மன்னரைப் பற்றிய தகவல்கள் இல்லாமலே உள்ளன. இச்சமயத்தில் குறுநிலத்தலைவர்கள் தத்தமது பகுதியை சுயமாக ஆண்டுவந்ததாகத் தெரிகிறது. அப்போது வேளாளர், காமுண்டர், வாண்டையார் போன்றவர்கள் முக்கியத்துவம் பெற்றிருந்தனர். இவர்கள் ஊர்களில் அவ்வப்போது ஏற்படும் சிக்கல்களையும் தீர்த்துவைத்தனர்.

இக்கல்வெட்டில் இவர்கள் உப்பிலியன்பள்ளி என்னும் ஊரில், நெடுங்காலமாய் இருந்து வந்த ஆசாரிகளில் நாற்பத்தெண்ணாயிரவர் என்ற குழுவைச் சேர்ந்த மாறப்பிள்ளையின் மகனை இளையராக அறிவிக்கின்றனர். இளையர் என்றால் வீரன் அல்லது வேலைக்காரர் என்று பொருள். இச்சொல்லானது சங்க இலக்கியங்கள் மட்டுமல்லாது 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சித்தன்னவாசல் தமிழ் கல்வெட்டிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இக்கல்வெட்டில் இளையர் என்ற சொல் ஊரைக் காக்கும் வீரன் என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது. நாற்பத்தெண்ணாயிரவர் என்பது பிற்கால சோழர் காலத்தில் தொண்டை மண்டலத்தில் சிறப்புற்றிருந்த ஒரு குழுவாகும். எனவே, இக்கல்வெட்டில் வரும் இளையர், நாற்பத்தெண்ணாசாரி ஆகிய இரண்டு சொற்களும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

மேலும் இக்கல்வெட்டு பையூர் பற்று, அங்கணப்பற்று, பாரூர் பற்று, புதுப்பற்று, பெருமுத்திப் பற்று என்ற வரிசையில் ராயக்கோட்டையும் ஒரு பற்றாக இருந்ததை அறிமுகப்படுத்துகிறது. நல்ராயன்பள்ளி என்று தற்போது அழக்கப்படும் இவ்வூரானது 600 ஆண்டுகளுக்கு முன்னர் உப்பிலியன்பள்ளி என்று அழைக்கப்பட்டதையும் இக்கல்வெட்டு வாயிலாக அறிகிறோம்.

இப்பெயரானது காலப்போக்கில் உப்புராயன்பள்ளி என்று மருவி தற்போது நல்ராயன்பள்ளி என்று அழைக்கப்பபடுகிறது. இக்கல்வெட்டு ஒரு நடுகல் கோவிலில் உள்ளது. அந்த நடுகல்லும் தனிச்சிறப்பு வாய்ந்ததாய் காணப்படுகிறது. அதன் கீழ் பகுதியில் 3 வீரர்கள் ஆயுதங்களோடு போர் அல்லது வேட்டைக்கு செல்வது போல் காடப்பட்டுள்ளனர். அதற்கு மேல் இடது மூலையில் ஒரு வீரன் பன்றியை குத்துவது சித்தரிக்கப்பட்டுள்ளது. அதற்கு மேல் ஒரு வீரனின் பெரிய உருவம் காட்டப்பட்டு அவனை நோக்கி 3 வீரர்களும் ஒரு பெண்ணும் நிற்பது காட்டப்பட்டுள்ளது.

பெரிய அளவில் குழலூதும் கிருஷ்ணரின் உருவமும் இதில் உள்ளது. இத்தொகுதியின் இடது மேல்பக்க மூலையில் பைரவர் மற்றும் மாரியம்மனின் உருவங்களும் காட்டப்பட்டுள்ளன. இறந்த இவ்வீரனை மற்ற கடவுளர்களுக்கு இணையாக கருதி மக்கள் வழிப்பட்டதை இந்நடுகல் வாயிலாகத் தெரிந்து கொள்கிறோம். ஒரு சில நடுகற்களே இவ்வாறு மற்ற கடவுள் உருவங்களோடு சேர்த்துக் காட்டப்பட்டுள்ளன. முன்பு கூறப்பட்ட கல்வெட்டுக்கும் உடன் காணப்படும் இந்த நடுகல்லுக்கும் உள்ள தொடர்பு தெரியவில்லை. ஒருவேளை கல்வெட்டு கூறும் இளையரான அந்த ஊர்காத்த வீரன் பன்றி வேட்டையின்போது இறந்துபோனதால் இந்நடுகல் எடுக்கப்பட்டிருக்கலாம்.' இவ்வாறு அவர் கூறினார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!