அதிமுகவுடன் எந்த தொடர்பும் இல்லாதவர் சசிகலா: கே.பி.முனுசாமி
சசிகலா எந்த வகையிலும் எங்களுக்கு தொடர்பு இல்லாதவர் என கிருஷ்ணகிரியில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி பேட்டி அளித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட குப்பச்சிபாரை, வீரோஜிபள்ளி கிராமங்களில் இன்று அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான கே.பி.முனுசாமி அம்மா மினி கிளினிக்கை திறந்த வைத்தார்.
அதனை தொடர்ந்து சசிகலா மீண்டும் கட்சியில் இனைய வாய்ப்பு உள்ளதா என செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த கே.பி.முனுசாமி அவர் எந்த வகையிலும் எங்களுக்கு தொடர்பு இல்லாத ஒருவர், அவரைப்பற்றி தொடர்ந்து நாங்கள் விமர்சனம் செய்வது ஆரோக்கியமாக இருக்காது. எந்த வகையிலும் தொடர்பு இல்லாத ஒரு நபரை பற்றி மீண்டும் மீண்டும் பேசுவது நாகரீகமாக இருக்காது. நான்தான் பொதுச்செயலாளர் என சசிகலா எங்கும் கூறவில்லை. ஊடகங்கள் தான் அவ்வாறு கூறுகின்றது. சசிகலா ஊர்வலமாக செல்வதை நாடே தெரிந்து கொள்வதற்கு எவ்வளவு செலவு செய்தார்கள் என்று அனைவருக்கும் தெரியும். இதைப்பற்றி அதிகம் விமர்சனம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை என தெரிவித்தார்.
ஜெயலலிதா அவர்களால் துரோகிகளை அடையாளம் காணப்பட்டவர் டிடிவி தினகரன். அவர் தன்னை நிலைப்படுத்திக் கொள்வதற்கு பல்வேறு வகையான தகுதி திட்டங்கள் செய்து கொண்டு வருகிறார். இவர்கள் தவறு செய்தவர்கள் என மக்கள் முழுமையாக ஏற்று அவர்களை ஒதுக்கி வைத்து விட்டார்கள். ஆகவே எந்த ரூபத்தில் வந்தாலும் அவர்கள் மக்கள் மத்தியில் செல்ல முடியாது என தெரிவித்தார்.
தொடர்ந்து பாஜக கூட்டணியால் வெற்றி வாய்ப்பில் சிக்கல் நிலவ வாய்ப்பு உள்ளதா? என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர் எங்களுக்கு அரசியல் அனுபவம் உள்ளது மக்கள் மனதில் என்ன உள்ளது என்பதையும் நாங்கள் அறிவோம். எங்கள் கூட்டணியில் யார் வருகிறார்கள் என்பது எங்களுக்கு முக்கியம் அல்ல, நாங்கள் எங்கள் ஆட்சியில் மக்களுக்கு செய்த சேவைகளை முன்னிறுத்தி தேர்தலை சந்திக்கிறோம். எங்களுடைய கொள்கை வேறு, பாரதிய ஜனதா கட்சியின் கொள்கை வேறு அவர்கள் கூட்டணிக்காக எங்களுடன் இணைகிறார்கள். அவர்கள் மத்தியில் ஆட்சியில் இருப்பதால் அவர்களுடன் இணக்கமாக செல்லக்கூடிய காரணத்தால்தான் ஒரு வருடத்தில் 11 மருத்துவ கல்லூரிகளை பெற முடிந்தது. இந்தியாவில் எந்த மாநிலமும் அவ்வாறு பெறவில்லை எங்களுடைய திட்டங்கள் அடிப்படையில் மக்கள் எங்களுக்கு வாக்களிப்பார்கள் என நம்புகிறோம் என தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu