கிருஷ்ணகிரியில் ரூ.7 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரிகள் 2 பேர் கைது
சிங்காரப்பேட்டையில் ரூ.7 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரிகள் 2 பேர் கைது லஞ்ச ஒழிப்பு போலீசார் பொறி வைத்து பிடித்தனர். சிங்காரப்பேட்டையில் ரூ.7 ஆயிரம் லஞ்சம வாங்கிய மின் வாரிய அதிகாரிகள் 2பேரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
இது பற்றிய விவரம் வருமாறு: கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தாலுகா பெரிய தள்ளப்பாடியை சேர்ந்தவர் மூர்த்தி. இவரது மகன் தினகரன் (23). இவருக்கு சொந்தமாக 2 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தில் ஒரு ஏக்கரில் பூந்தோட்டம் அமைத்து பராமரித்து வருகிறார். இவருடைய விவசாய கிணற்றில் மின் இணைப்பு பெறுவதற்காக கடந்த மே மாதம் சிங்காரப்பேட்டையில் உள்ள உதவி மின் பொறியாளர் அலுவலகத்தில் விண்ணப்பித்தார். அப்போது உதவி மின் பொறியாளர் அலுவலக வணிக ஆய்வாளர் பட்டாபிராமன் (37) என்பவர் மின் இணைப்பு கொடுக்க வேண்டும் என்றால் தனக்கு ரூ.10 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் என்று தினகரனிடம் கேட்டார்.
அவ்வளவு தொகை தன்னால் தர இயலாது என தினகரன் கூறினார். இறுதியாக ரூ.7ஆயிரம் தந்தால் மின் இணைப்பு தருவதாக பட்டாபிராமன் கூறினார். அந்த லஞ்ச பணத்தை கொடுக்க விரும்பாத தினகரன் இது குறித்து கிருஷ்ணகிரி லஞ்ச ஒழிப்புபோலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் சேலம் லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜன், கிருஷ்ணகிரி லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் சையத் சுல்தான் பாஷா மற்றும் போலீசார் சிங்காரப்பேட்டை உதவி மின் பொறியாளர் அலுவலகத்திற்கு சென்றனர்.
அங்கு லஞ்ச ஒழிப்பு போலீசார் வகுத்து கொடுத்த திட்டத்தின்படி தினகரன் லஞ்ச பணம் ரூ.7 ஆயிரத்தை வணிக ஆய்வாளர் பட்டாபிராமிடம் கொடுக்க முயன்றார். அவர் அந்த தொகையை உதவி வணிக ஆய்வாளர் சதாசிவம் (42) என்பவரிடம் கொடுக்க சொன்னார். அந்த பணத்தை சதாசிவம் பெற முயன்ற போது லஞ்ச ஒழிப்பு போலீசார் உள்ளே சென்று கையும், களவுமாக பிடித்தனர்.
பின்னர் வணிக ஆய்வாளர் பட்டாபிராமன், உதவி வணிக ஆய்வாளர் சதாசிவம் ஆகிய ௨ பேரையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. சிங்காரப்பேட்டையில் மின் இணைப்பு வழங்க ரூ.7 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சம்பவத்தில் மின்வாரிய அதிகாரிகள் 2 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu