நூற்பாலையில் நாளொன்றுக்கு 5,500 கிலோ நூல் உற்பத்தி: கலெக்டர் தகவல்
ஊத்தங்கரை கூட்டுறவு நூற்பாலையில் ஆய்வு மேற்கொண்ட கலெக்டர் ஜெயசந்திர பானுரெட்டி.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை கூட்டுறவு நூற்பாலையின் செயல்பாடுகளை, மாவட்ட கலெக்டர் ஜெயசந்திர பானுரெட்டி இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அவர் கூறியதாவது: ஊத்தங்கரை கூட்டுறவு நூற்பாலையை லாபத்தில் இயக்க பல்வேறு தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, ஜூலை மாதத்தில் 71.29 சதவீதமாக இருந்த கூட்டுறவு நூற்பாலையின் உற்பத்தி தற்போது, 81 சதவீதமாக உயர்ந்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில், மூன்று லட்ச ரூபாய் லாபத்துடன் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
கூட்டுறவு நூற்பாலையில் நாள் ஒன்றுக்கு 5,500 கிலோ நூல் உற்பத்தி செய்யப்படுகிறது. தற்போது ஆலையில் பள்ளி குழந்தைகளுகளுக்கான சீருடை, விலையில்லா வேட்டி சேலை வழங்கும் திட்டங்களுக்கு, அரசு நூல் கிடங்குகள் வாயிலாக நூல் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. தரமான முறையில் நூல் உற்பத்தி செய்யப்பட்டு நூல் விலை நிர்ணயக்குழு நிர்ணயிக்கும் விலையில் நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு சிட்டா நூல், கோவை தேசிய கைத்தறி வளர்ச்சி கழகம் மூலம் விற்பனை செய்யப்படுகிறது.
ஆலையின் மாதாந்திர நூல் விற்பனை மதிப்பு சராசரியாக, 280 லட்ச ரூபாய் ஆகும். தற்போது, கிருஷ்ணகிரி மாவட்ட கூட்டுறவு நூற்பாலை புதிய இயந்திரங்கள் கொள்முதல் செய்யப்பட்டு புனரமைக்கப்பட்டதன் மூலமாக ஆலையின் உற்பத்தி திறன் அதிகரித்ததுடன், அரசின் திட்டங்களுக்கு தேவையான நூல் தங்குதடையின்றி வினியோகம் செய்யப்பட்டும், தொழிலாளார்களுக்கு தொடர் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu