சென்னை பிரபல ஆடிட்டர் காரில் கடத்தி கொன்று புதைப்பு, திடுக்கிடும் தகவல்
கிருஷ்ணகிரியில் கொலை செய்து புதைக்கப்பட்ட பிரபல ஆடிட்டர்.
சென்னை வேளச்சேரி பகுதியை சேர்ந்தவர் ஜனரஞ்சன் பிரதான். ஆடிட்டராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் தன்னுடன் பணிபுரியும் கிருஷ்ணகுமார் என்பவருடன் கடந்த, 26ம் தேதி சென்னையிலிருந்து வேலூருக்கு காரில் வந்தார். இவர்களுடன் பணிபுரியும் சபரீஷ் என்பவர் மற்றொரு காரில் வந்தார்.
இரவு, 10 மணியளவில், ஜனரஞ்சன் பிரதான் தன் மனைவி பூர்ணிமா பிரதானுக்கு போன் செய்து தான் வேலூருக்கு வந்த வேலை முடிந்து விட்டது. மறுநாள் கிருஷ்ணகிரியில் வேலை உள்ளது. எனவே அங்கு செல்கிறேன் என்று கூறினார்.
இந்த நிலையில் கடந்த, 27ம் தேதி ஜனரஞ்சன் பிரதான்க்கு அவரது மனைவி போன் செய்தார். அப்போது போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து அவருடன் சென்ற கிருஷ்ணகுமார், சபரீஷ் இருவருக்கும் போன் செய்த போது அவர்கள் பல முறை போனை எடுக்கவில்லை.
இந்த நிலையில் நீண்ட நேரத்திற்கு பிறகு அவர்கள் போனை எடுத்து சரியாக விவரம் கூறாமல் போனை வைத்து விட்டனர். இதனால் சந்தேகம் அடைந்த பூர்ணிமா பிரதான் கடந்த, 28ம் தேதி கிருஷ்ணகிரி டவுன் போலீசில் புகார் அளித்தார்.
அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) முரளி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கிருஷ்ணகுமார், சபரீஷ் ஆகியேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
அதில் ஜனரஞ்சன் பிரதானை பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்சினையில் கொலை செய்யப்பட்டதும், அவரை கொலை செய்து உடலை கிருஷ்ணகிரி மாவட்டம் சாமல்பட்டி அருகே கிருஷ்ணகுமார் மற்றும் அவரது கூட்டாளிகள் புதைத்ததும் தெரிய வந்தது.
இதையடுத்து கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி, துணை போலீஸ் சூப்பிரண்டுகள் சரவணன் (கிருஷ்ணகிரி), தங்கவேல் (பர்கூர்), அலெக்சாண்டர் (ஊத்தங்கரை), கிருத்திகா (தேன்கனிக்கோட்டை) மற்றும்போலீசார் மாலை சாமல்பட்டிக்கு சென்றனர்.
அங்கு சாமல்பட்டி அருகே கொல்லப்பட்டி என்ற இடத்தில் ஒரு மாந்தோப்பில் புதைக்கப்பட்டிருந்த ஜனரஞ்சன் பிரதான் உடலை தோண்டி எடுக்கும் பணிதொடங்கியது.
அந்த நேரம் பலத்த மழை பெய்ததால் உடலை தோண்டி எடுப்பதில் தாமதம் ஏற்பட்டது. இரவு 7 மணி அளவில் உடலை தோண்டி எடுக்கும் பணி தொடங்கி 8 மணி அளவில் நிறைவடைந்தது. இதைத் தொடர்ந்து ஜனரஞ்சன் பிரதான் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த கொலை தொடர்பாக சென்னையை சேர்ந்த கிருஷ்ணகுமார், சபரீசன் மற்றும் சிவன், கோபி, மணிவண்ணன், திருமால் ஆகிய 6 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை ஆடிட்டர், கிருஷ்ணகிரி அருகே கடத்தி கொன்று புதைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu