சென்னை ஆடிட்டர் கொலை வழக்கு: கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் இருவர் சரண்

சென்னை ஆடிட்டர் கொலை வழக்கு: கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் இருவர் சரண்
X

கைது செய்யப்பட்ட முனியப்பன், விஜி.

சென்னை ஆடிட்டர் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த 2 பேர் கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் இன்று சரண் அடைந்தனர்.

சென்னை வேளச்சேரியை சேர்ந்தவர் ஆடிட்டர் ஜனரஞ்சன் பிரதான். இவர் கடந்த 27ம் தேதி கிருஷ்ணகிரிக்கு காரில் வந்த போது மாயமானார். இது குறித்து அவரது மனைவி பூர்ணிமா கிருஷ்ணகிரி டவுன் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் ஆடிட்டர் ஜனரஞ்சன் பிரதானை ஒரு கும்பல் கடத்தி சென்று கொன்று, அவரை சாமல்பட்டி அருகே மாந்தோப்பில் புதைத்தது விசாரணையில் தெரிய வந்தது. இந்த கொலை தொடர்பாக சென்னையை சேர்ந்த வழக்கிறிஞர் கிருஷ்ணகுமார், பெரம்பலூர் சபரீஷ், சாமல்பட்டி விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் ஜிம் மோகன் உள்பட மொத்தம் 9 பேரை போலீசார் கைது செய்தனர். பண விவகாரத்தில் இந்த கொலை நடந்தது விசாரணையில் தெரிய வந்தது.

கொலை செய்யப்பட்ட ஜனரஞ்சன் பிரதான் ரூ.30 கோடி கடன் வாங்கி தருவதாக சபரீசிடம் கூறியதாவும், அதற்காக ரூ.3.50 கோடி கமிஷன் கேட்டதாகவும் கூறப்படுகிறது. சபரீசனும் இந்த தொகையை ஜனரஞ்சன் பிரதானிடம் கொடுத்த நிலையில், கடன் தொகையை கொடுக்காததால் அவரை கிருஷ்ணகிரிக்கு அழைத்து வந்து மிரட்டிய போது தாக்கியுள்ளனர். இதில் ஜனரஞ்சன் பிரதான் இறந்த நிலையில் அவரது உடலை சாமல்பட்டியில் மாந்தோப்பில் புதைத்தது விசாரணையில் தெரிய வந்தது.

இந்த கொலை தொடர்பாக ஊத்தங்கரை தாலுகா, சாமல்பட்டி அம்பேத்கர் நகரைச் சேர்ந்த முனியப்பன், விஜி ஆகிய 2 பேரை கிருஷ்ணகிரி டவுன் போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் அவர்கள் 2 பேரும் இன்று கிருஷ்ணகிரி ஜே.எம்.1 கோர்ட்டில் மாஜிஸ்திரேட்டு செந்தில்பிரபு முன்னிலையில் சரண் அடைந்தனர்.

இதைத் தொடர்ந்து நீதிமன்ற உத்தரவுப்படி முனியப்பன், விஜி ஆகிய 2 பேரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த கொலை வழக்கில் 9 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்ட நிலையில், 2 பேர் தற்போது சரண் அடைந்துள்ளனர். இவ்வழக்கில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!