செவிலியரின் கணவருக்கு கொலை மிரட்டல் விடுத்த அரசு டாக்டர் மீது வழக்கு பதிவு
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள பாரூரில் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்கு மருத்துவ அலுவலராக முருகன் என்பவர் பணிபுரிந்து வருகிறார்.
இதே பாரூர் பகுதியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் .இவரது மனைவி ஜானகி. இவர் நாகரசம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முன்பு பணிபுரிந்து வந்தார்.
கடந்த 2016ம் ஆண்டு டாக்டர் முருகனும், செவிலியர் ஜானகியும் பாரூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரிந்து வந்தனர். அந்த நேரம் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.
இதன் காரணமாக பண்ணந்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு முருகன் இடமாற்றம் செய்யப்பட்டார். ஜானகி சூளகிரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மாற்றப்பட்டார்.
சிறிது காலத்திற்கு பிறகு முருகன் மீண்டும் பாரூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பணிக்கு வந்து விட்டார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பாரூர் பகுதி பொதுமக்கள் சார்பில் கலெக்டரிடம் ஒரு புகார் மனு கொடுக்கப்பட்டது.
அதில் டாக்டர் முருகன் மது போதையில் பணிக்கு வருவதாகவும், சரியாக பணிக்கு வருவதில்லை எனதெரிவித்திருந்தனர். இந்த புகார் மனு தொடர்பாக தெரிய வந்த முருகன், ஏற்கனவே தன்னுடன் பணியாற்றி பிரச்சினை செய்த ஜானகி மற்றும் அவரது கணவர் பன்னீர்செல்வம் தான் இதற்கு காரணம் என நினைத்தார்.
இதையடுத்து பன்னீர்செல்வத்திற்கு போனில் தொடர்பு கொண்டு பேசிய முருகன், அவரை ஆபாச வார்த்தையால் திட்டிகொலை மிரட்டல் விடுத்தார்.
இது தொடர்பாக பன்னீர்செல்வம் பாரூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி பாரூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் முருகன் மீது ஆபாசமாக பேசுதல், கொலை மிரட்டல் விடுத்தல்ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu