கத்தி முனையில் பைனான்சியரிடம் நகை, பணம் கொள்ளை: பெண் உள்பட 5 பேர் கைது

கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே கத்தியை காட்டி மிரட்டி, பைனான்சியரிடம் நகை, பணம் கொள்ளையடித்த பெண் உள்பட 5 பேரை கைது செய்த போலீசார், மேலும் 3 பேரை தேடி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் செந்தில் நகரை சேர்ந்தவர் முருகன் (எ) அருள்வாணன்(48). பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். வீட்டில் முருகன் தனியாக இருந்த போது நுழைந்த 3 வாலிபர்கள், கத்தியை காட்டி மிரட்டி, அவர் அணிந்திருந்த 9 பவுன் தங்க நகைகள், பணம், செல்போனை கொள்ளையடித்து சென்றனர்.

இதுகுறித்து கெலமங்கலம் போலீசில் முருகன்புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் எஸ்ஐ சுப்பிரமணி மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். அங்கிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.

இதைத் தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் கெலமங்கலம் செந்தில் நகரை சேர்ந்த அந்தோணி (33), வெங்கடேஷ் (25) ஆகியோர் உதவியுடன் கொள்ளை கும்பல் இதில் ஈடுபட்டது தெரிய வந்தது. கொள்ளையில் ஈடுபட்ட கர்நாடக மாநிலம் கோணப்ப அக்ரஹாரம் திவ்யா (35), ஏர்போர்ட் மாரதஅள்ளி ராஜா (27), மாருதி நகர் மஞ்சுநாத் (27), கெலமங்கலம் செந்தில் நகர் அந்தோணி (33) வெங்கடேஷ் (25) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

திவ்யாவுக்கும், முருகனுக்கும் ஏற்கனவே பழக்கம் இருந்து உள்ளது. முருகன் வட்டி தொழில் செய்து வருவதால் அவரிடம் பணம் அதிகமாக இருப்பதை திவ்யா அறிந்துள்ளார். இதையடுத்து அந்தோணி, வெங்கடேஷ் உதவியுடன் இந்த கொள்ளையை நடத்தியது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது.

அவர்களிடம் இருந்து மோதிரம், பணம் ரூ.7 ஆயிரம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதில் தொடர்புடைய பெங்களூரை சேர்ந்த முக்கிய கொள்ளையர்கள் 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!