கிருஷ்ணகிரி: வீடுகளில் கொள்ளையடிக்க வந்த 4 பேர் கைது; 2 பேருக்கு வலைவீச்சு
கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் போலீஸ் எஸ்ஐ பார்த்திபன் தலைமையில் போலீசார் ஓசூர் - கெலமங்கலம் சாலையில் மஞ்சளகிரி பஸ் நிறுத்தம் அருகில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது ஓசூரில் இருந்து கெலமங்கலம் நோக்கி 3 டூவீலர்களில் தலா 2 பேர் வீதம் மொத்தம் 6 பேர் வந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது ஒரு டூவீலரில் வந்த 2 பேர் அங்கிருந்து தப்பி சென்றனர். மற்ற 4 பேரையும் போலீசார் சுற்றி வளைத்து பிடித்து விசாரணை நடத்தினர்.
இதில், அவர்கள் கர்நாடக மாநிலம் ஆனேக்கல் தாலுகா எடம்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த நவீன்குமார் என்கிற கிருஷ்ணா (34), அத்திப்பள்ளி பக்கமுள்ள ஜிகாலா கிராமத்தைச் சேர்ந்த எல்லப்பா மகன் நாகராஜ் (28), அத்திப்பள்ளியை சேர்ந்த பாஷா மகன் அன்சர்பாஷா (25), ஜிகாலாவை சேர்ந்த உதய்கிரண் என்கிற முனிராஜ்(19) என தெரிய வந்தது.
அவர்கள் 4 பேரும், கெலமங்கலம் பகுதியில் இரவு நேரத்தில் வீடுகளில் புகுந்து கொள்ளையடிக்க திட்டமிட்டதும், இதற்காக அந்த பகுதியில் வேவு பார்க்க வந்ததும் தெரிய வந்தது. 4 பேரையும் சோதனை செய்தபோது, அவர்களிடம் இருந்து 2 கத்தி, மிளகாய் பொடிகள் கண்டறியப்பட்டன. அவர்களை போலீசார் கைது செய்தனர்.
தப்பி ஓடியவர்கள், பிரேம்குமார் (எ) புல்லட், ராக்கி (எ) ராகேஷ் என்பதும், அவர்கள் 2 பேரும் ஏற்கனவே கெலமங்கலம் செந்தில் நகரில் பைனான்சியர் முருகன் என்பவரிடம் கத்தியை காட்டி மிரட்டி, பணம், நகைகளை கொள்ளையடித்த வழக்கில் முக்கிய குற்றவாளிகள் என தெரிய வந்தது. அவர்களை, ராயக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி தலைமையிலான போலீசார் தேடி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu