காட்டுப்பன்றிக்கு வைத்த மின்வேலியில் சிக்கி விவசாயி பலி

காட்டுப்பன்றிக்கு வைத்த மின்வேலியில் சிக்கி விவசாயி பலி
X

மாதிரி படம்

உத்தனப்பள்ளி அருகே காட்டுப்பன்றிக்கு வைத்த மின்வேலியில் சிக்கி விவசாயி பரிதாபமாக இறந்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளி அருகே உள்ள சின்ன பேட்டகானப்பள்ளியை சேர்ந்தவர் அப்பண்ணா. இவரது மகன் சுரேஷ். விவசாயி. இவருக்கு திருமணம் ஆகி நிலா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.

சுரேஷ் நேற்று இரவு சுமார் 11.30 மணி அளவில் தனது மாமனார் கோவிந்தப்பா என்பவரின் விவசாய நிலத்தில் காட்டு விலங்குகள் எதுவும் வருகிறதா? என பார்ப்பதற்காக சென்றார். அவருடன் சின்ன பேட்டகாணப்பள்ளியை சேர்ந்த முருகேஷ் என்பவரும் உடன் சென்றார்.

அந்த நேரம் முருகேசனை ஒரு இடத்தில் அமர சொல்லி விட்டு சுரேஷ் நிலத்திற்குள் சுற்றி பார்த்தார். அந்த நேரம் அருகே உள்ள கோவிந்தன் என்பவரின் நிலத்திற்கு விடப்பட்டிருந்த மின் வேலியில் சிக்கி சுரேஷ் மின்சாரம் தாக்கி பலியானார்.

இது குறித்து தகவல் அறிந்ததும் சுரேசின் உறவினர்கள் அங்கு வந்து இது குறித்து உத்தனப்பள்ளி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக உத்தனப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியபோது, காட்டுப்பன்றிக்காக வைத்த மின் வேலியில் சிக்கி விவசாயி பலியானது தெரிய வந்தது. இது குறித்து இன்று போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது