கிருஷ்ணகிரி மாவட்டத்தில் "மா" விளைபொருட்களை பதப்படுத்தும் திட்டம்
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி
இது குறித்து மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
பிரதமரால் 2020-21ம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட ஆத்மநிர்பார் பாரத் அபியான் திட்டத்தின் கீழ் ஒரு பகுதியாக அமைப்பு சாரா உணவு பதப்படுத்தும் சிறு நிறுவனங்களை வலுப்படுத்தும் விதமாக பாரத பிரதமர் உணவு பதப்படுத்தும் சிறு நிறுவனங்களுக்கான திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் 2020-21 முதல் 2024-25ம் ஆண்டு வரை 5 ஆண்டுகளுக்கு செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டம் மத்திய அரசின் 60 சதவீதம் மற்றும் மாநில அரசின் 40 சதவீதம் நிதி பங்களிப்புடன் செயல்படுத்தப்படும்.
உணவு பதப்படுத்தும் சிறு நிறுவனங்களுக்கான இத்திட்டத்தின் மூலம் 2021-22ம் ஆண்டில் தனிநபர் அடிப்படையில், ஏற்கனவே உணவு பதப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டுள்ள சிறு நிறுவனங்களை வலுப்படுத்துதல் அல்லது புதிய நிறுவனங்கள் தொடங்குதல், குழு அடிப்படையில் பொத உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தி தருதல், வர்த்தக முத்திரை மற்றும் சந்தைப்படுத்துதல், தொழில்நுட்ப பயிற்சிகள் போன்றவற்றிற்கு நிதியுதவி வழங்கப்படும். மேலும், உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள், சுய உதவி குழுக்கள் மற்றும் கூட்டுறவு நிறுவனங்கள் போன்றவைகளுக்கும் நிதி உதவி வழங்கப்படும்.
இத்திட்டம் ஒரு மாவட்டத்திற்கு ஒரு விளைபொருள் என்ற அணுகு முறையில் செயல்படுத்தப்படுகிறது. அதன் அடிப்படையில் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட "மா" விளை பொருட்களை பதப்படுத்தும் தொழில் ஈடுபட்டுள்ள மற்றும் ஈடுபட உள்ள சிறு உணவு பதப்படுத்தும் நிறுவனங்களுக்கு, முன்னுரிமை அளிக்கப்படும். இத்திட்டத்தின் மூலம் ஒரு சிறு உணவு பதப்படுத்தும் நிறுவனம், தகுதியான திட்ட மதிப்பீட்டில் 35 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை நிதியுதவி பெற்று பயன்பெற வாய்ப்புள்ளது. மேலும், சிறு உணவு பதப்படுத்தும் நிறுவனங்களுக்கு தேவைப்படும் தொழில் கடன் தொகை, வங்கி மூலம் ஏற்பாடு செய்து தரப்படும்.
எனவே, கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட "மா" விளைபொருட்களை பதப்படுத்தும் தொழிலில் ஏற்கனவே ஈடுபட்டுள்ள மற்றும் புதியதாக ஈடுபட உள்ள நிறுவனங்கள், இத்திட்டத்தின்கீழ் வழங்கப்படும் சலுகைகளை பெற்று பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறேன். மேலும் விபரங்களுக்கு மாவட்ட வேளாண்மை துணை இயக்குநர் (வேளாண் வணிகம்) செல்போன் எண். 9842783711 தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு தனது செய்திக்குறிப்பில் கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu