ஓசூரில் சாமந்திப்பூ வரத்து அதிகரிப்பால் விலை சரிவு: விவசாயிகள் ஏமாற்றம்
ஓசூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதியில் சாமந்தி, ரோஜா, செண்டுமல்லி உள்ளிட்ட பூக்களை விவசாயிகள் பசுமைக் குடில் அமைத்தும், திறந்தவெளியிலும் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்து வருகின்றனர். இங்கு அறுவடை செய்யப்படும் பூக்கள், ஓசூர் மலர் சந்தையில் விற்பனைக்குக் கொண்டு வரப்படுகிறது. மேலும், இங்கிருந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் கர்நாடக மாநிலத்துக்கும் விற்பனைக்குச் செல்கின்றன.
இந்நிலையில், பொங்கல் பண்டிகையையொட்டி, தேன்கனிக்கோட்டை, பாகலூர், கெலமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் அறுவடை செய்யப்பட்ட சாமந்தி உள்ளிட்ட பூக்கள் நேற்று ஓசூர் மலர் சந்தைக்கு விற்பனைக்கு வந்தன. வழக்கத்தை விடச் சந்தைக்குச் சாமந்தி உள்ளிட்ட பூக்கள் வரத்து அதிகரித்து இருந்ததால், விலை குறைந்தது. இது விவசாயிகளிடம் கவலையை ஏற்படுத்தியது. அதே நேரம் வியாபாரிகள் மகிழ்வுடன் பூக்களைக் கொள்முதல் செய்தனர்.
இது தொடர்பாக விவசாயிகள் கூறுகையில், சீசனை நம்பியே சாமந்திப்பூ மற்றும் செண்டுமல்லி உள்ளிட்ட பூக்களைச் சாகுபடி செய்கிறோம். பொங்கல் பண்டிகைக்கு நல்ல விலை கிடைக்கும் என எதிர்பார்த்தோம். ஆனால், பனிப்பொழிவு காரணமாக வழக்கமாக ஒரு ஏக்கருக்கு 2 டன் சாமந்திப்பூ மகசூல் கிடைத்த நிலையில், தற்போது 3 டன் வரை மகசூல் கிடைத்துள்ளது. இதனால், சந்தைக்கு சாமந்திப்பூ வரத்து அதிகரித்தது. மேலும், கர்நாடக மாநில எல்லைப் பகுதியில் அப்பகுதி விவசாயிகள் சாகுபடி செய்துள்ள சாமந்திப் பூவும் ஓசூர் மலர் சந்தைக்கு அதிக அளவில் விற்பனைக்கு வந்ததால், சாமந்திப்பூவின் விலை குறைந்தது.
கடந்தாண்டு பொங்கல் பண்டிகையின் போது, முதல் தரம் சாமந்திப் பூ கிலோ ரூ.340 முதல் ரூ.400 வரையில் விற்பனையான நிலையில், தற்போது, ரூ.180-க்கு விற்பனையானது. இதேபோல கடந்தாண்டு 2 -ம் தரம் ரூ.250-க்கு விற்பனையான நிலையில், தற்போது, ரூ.80 முதல் ரூ.120 வரை விற்பனையானது. இதே போல மற்ற பூக்களின் விலையும் குறைவாக இருந்தது. செண்டு மல்லி ரூ.40, பட்டன் ரோஜா ரூ.100, சம்பங்கி ரூ.120, ஒரு கட்டு ரோஜா ( 20 பூக்கள் ) ரூ.100-க்கும் விற்பனையானது. கடந்தாண்டை விட தற்போது, பொங்கல் பண்டிகையில் எதிர்பார்த்த விலை கிடைக்காததால், ஏமாற்றமே எங்களுக்குக் கிடைத்துள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu