கிருஷ்ணகிரி: அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ரூ.10 கோடி கொரோனா நிவாரணம்

கிருஷ்ணகிரி: அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு   ரூ.10 கோடி கொரோனா நிவாரணம்
X
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ரூ.10 கோடி மதிப்பில் கொரோனா நிவாரண உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளதாக கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி கூறினார்.

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா நல வாரியங்கள் (சமூக பாதுகாப்பு திட்டம்) சார்பில் பதிவு பெற்ற அமைப்புசாரா தொழிலாளர்கள் 20 பேருக்கு மாதந்தோறும் முதியோர் உதவி தொகை ரூ.1000 பெறுவதற்கான ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

இந்நிகழ்ச்சிக்கு, மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தலைமை வகித்து, முதியோர் உதவித்தொகை வழங்குவதற்கான ஆணைகளை வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொழிலாளர்களின் நலன் காக்கும் வகையில் பல்வேறு நிவாரண உதவிகள் மற்றும் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஆயிரம் பதிவு பெற்ற அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு, வழங்க ஏதுவாக முதற்கட்டமாக 20 நபர்களுக்கு ஓய்வூதிய உதவித்தொகை பெறுவதற்கான ஆணை வழங்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொழிலாளர் நல வாரியத்தில் கட்டுமான தொழிலாளர்கள் ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 845 பேர், அமைப்பு சாரா தொழிலாளர்கள் 6பு ஆயிரத்து 619 பேர், அைம்பு சாரா ஓட்டுனர்கள் 2 ஆயிரத்து 254 பேர் என மொத்தம் ஒரு லட்சத்து 84 ஆயிரத்து 718 தொழிலாளர்கள் பதிவு செய்துள்ளனர்.

கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியம் மூலம் 51 ஆயிரத்து 517 தொழிலாளர்களுக்கு ரூ.23.38 கோடி மதிப்பிலும், அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரியம் மூலம் 28 ஆயிரத்து 495 தொழிலாளர்களுக்கும், அமைப்புசாரா ஓட்டுனர்கள் நல வாரியம் மூலம் 978 ஓட்டுனர்களுக்கு ரூ.36 லட்சம் என மொத்தம் 80 ஆயிரத்து 990 தொழிலாளர்கள் மற்றும் ஓட்டுனர்கள் ஆகியோருக்கு ரூ.34.86 கோடி மதிப்பில் கல்வி, திருமணம், மகப்பேறு, கண் கண்ணாடி, இயற்கை மரணம், விபத்து மரணம் மற்றும் ஓய்வூதியம் ஆகிய உதவித்தொகைகள் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியம் மூலம் மொத்தம் 50 ஆயிரத்து 253 தொழிலாளர்கள், வணிகர்கள் மற்றும் ஓட்டுனர்கள் ஆகியோருக்கு ரூ.10.05 கோடி மதிப்பீட்டில் கொரோனா நிவாரண உதவித்தெகை வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து கலெக்டர், ஊரக வாழ்வாதார புத்தாக்க திட்டத்தின் கீழ், கடன் வழங்கும் முகாமை தொடங்கி வைத்து, 4 பயனாளிகளுக்கு கடனுதவிகள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) முருகன், தொழிலாளர் நல வாரிய உதவி ஆணையர் வெங்கடாசலபதி, மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் பிரசன்ன பாலமுருகன், தாட்கோ மாவட்ட பொது மேலாளர் யுவராஜ், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மகிழ்நன், மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ai marketing future