கிருஷ்ணகிரியில் அதிகரிக்கும் நாய்கள் தொல்லை: இளைஞர் படுகாயம்
இளைஞர் படுகாயம் அடைந்த சிசிடிவி படம்.
கிருஷ்ணகிரி கோஆபரேட்டிவ் காலனியைச் சேர்ந்தவர் யாரப்பாஷா இவரது மகன் 17 வயதான முபாரக். யாரப்பாஷா கிருஷ்ணகிரி அடுத்த காட்டினாயனப்பள்ளியில் புதிதாக வீடு கட்டி வருகிறார். இன்று காலை வீடு கட்டுமான பணி நடைபெற்று வரும் நிலையில் கோ அபரேடிவ்காலனியில் உள்ள தனது மகன் முபாரக்கை கட்டுமான பணியில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு உணவு எடுத்துச் செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளார்.
அதன்படி இன்று காலை முபாரக் தனது வீட்டிலிருந்து உணவு எடுத்துக்கொண்டு சென்னை சாலை வழியாக கட்டினாயணபள்ளி சென்றார். அப்போது சாந்தி தியேட்டர் அருகே திடீரென சாலையின் ஓரம் இருந்த நாய் குறுக்கே வந்துள்ளது. இதனால் இருசக்கர வாகனத்தில் சென்ற முபாரக் நாயின் மீது மோதி நிலைதடுமாறி கீழே விழுந்தார்.
இந்த விபத்தில் காலில் படுகாயம் அடைந்த முபாரக்கை அருகிலிருந்தவர்கள் மீட்டு உடனடியாக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர்.
கிருஷ்ணகிரி நகராட்சி பகுதியில் அதிக அளவில் கால்நடைகள் மற்றும் நாய்கள் சாலைகளில் சுற்றித் திரிவதால் அதிகளவில் விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக ராயகோட்டை சாலை, சென்னை சாலை, பெங்களூர் சாலை உள்ளிட்ட போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளில் இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் அதிக அளவில் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்து வருகிறார்கள்.
உடனடியாக நகராட்சி நிர்வாகம் சார்பில் சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளை பிடித்து அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என்றும், அதிக அளவில் அதிகரித்து உள்ள நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu