தபால் வாக்கு பதிவு தொடக்கம்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், ஊத்தங்கரை(தனி), பர்கூர், கிருஷ்ணகிரி, வேப்பனஹள்ளி, ஓசூர், தளி ஆகிய ஆறு சட்டசபைத் தொகுதிகளில் வருகிற ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிக்க முடியாத, 80 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட மற்றும் பாதிப்பு உள்ளதாக சந்தேகப்படும் வாக்காளர்கள், தங்களது வாக்குகளை விருப்பத்தின் அடிப்படையில் தபால் மூலம் செலுத்தலாம் என மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான ஜெயசந்திரபானு ரெட்டி தெரிவித்திருந்தார்.
இந்த ஆறு தொகுதிகளிலும், 13 ஆயிரத்து 723 மாற்றுத்திறனாளி வாக்காளர்களும், 80 வயதிற்கு மேற்பட்ட 28 ஆயிரத்து 543 வாக்காளர்கள் என மொத்தம், 42 ஆயிரத்து 266 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களுக்கு தபால் வாக்குகள் அளிக்க படிவம் 12டி ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது. இவர்களில் ஆறு தொகுதிகளிலும், 2,332 மூத்தகுடிமக்களும், 704 மாற்றுத்திறனாளிகள் என மொத்தம், 3,036 பேர் தபால் வாக்களிக்க சம்மதம் தெரிவித்தனர். இந்நிலையில், கிருஷ்ணகிரியில் தபால் வாக்கு படிவம் பெற்றுள்ள மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கொரோனா பாதிக்கப்பட்டவர்களிடம் கடந்த இரண்டு நாட்களாக அவர்களின் இருப்பிடத்திற்கே சென்று தபால் வாக்குகளை பெற்று வருகின்றனர்.
இப்பணியில், மண்டல அலுவலர், உதவியாளர், மைக்ரோ அப்சர்வர், ஒரு கேமராமேன் மற்றும் ஒரு போலீஸ் என ஐந்து பேர் கொண்ட குழுவினர் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் பூத் கமிட்டி அல்லது வட்டச் செயலாளர் முன்னிலையில், மூத்த குடிமக்களிடம் விண்ணப்பங்களில் கையொப்பம் பெற்று, வாக்குச்சீட்டில் உள்ள சின்னத்தில் டிக் செய்யச் சொல்லி, அதைப் பெற்று கவரில் வைத்து சீல் வைக்கின்றனர். இவற்றை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்து வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu