கிருஷ்ணகிரியில் முன்னேற்பாடாக ஒமிக்ரான் சிகிச்சை வார்டுகள் துவக்கம்

கிருஷ்ணகிரியில் முன்னேற்பாடாக ஒமிக்ரான் சிகிச்சை வார்டுகள் துவக்கம்
X

ஒமிக்ரான் சிகிச்சை வார்டு.

கிருஷ்ணகிரியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒமிக்ரான் சிகிச்சை வார்டுகள் துவங்கப்பட்டுள்ளன.

கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் முன்னேற்பாட்டு நடவடிக்கையாக ஒமிக்ரான் சிகிச்சை வார்டு துவக்கப்பட்டது.

இதுகுறித்து செய்தியாளரிடம் பேசிய கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனை கல்லூரி டீன் அசோகன், கொரோனாவால் கடந்த, 2 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் பாதிக்கப்பட்ட நிலையில், கடந்த இரு வாரங்களுக்கு முன்பு புதிய வடிவம் பெற்று ஒமிக்ரான் வைரசாக உருமாறியுள்ளது தென் ஆப்பிரிக்க நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தற்போது வரை 40க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ள இந்த வைரஸ் வேகமாக பரவக்கூடியது. கர்நாடக மாநிலத்திலும் இருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த மாநிலத்தை ஒட்டி அமைந்துள்ள கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் முன்னேற்பாடுகள் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

அதற்காக கிருஷ்ணகிரி மருத்துவமனையில், 30 படுக்கைகள் கொண்ட ஒமிக்ரான் சிகிச்சை வார்டு துவங்கப்பட்டுள்ளது. அரசின் அறிவுறுத்தலின்படி வெளிநாடுகளில் இருந்து வருவோர் ஒருவாரத்திற்கு தனிமைப்படுத்தப்பட்டு ஒமிக்ரான் பரிசோதனையும் செய்யப்பட்டு வருகிறது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தை பொருத்தவரை இன்னமும், 4 லட்சத்து, 20 ஆயிரம் பேர் தடுப்பூசி போடாமல் உள்ளனர் அவர்கள் உடனடியாக தடுப்பூசி போட வேண்டும். மேலும் முகக்கவசம், சமூக இடைவெளி இவற்றைக் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். கிருஷ்ணகிரி மருத்துவமனையில் தினமும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதன் மூலம் தினமும், 350 பேர் தடுப்பூசி போட்டு வருகின்றனர். தடுப்பூசி போடாதவர்களும் விரைவில் தடுப்பூசி போட வேண்டும். அப்போதுதான் புதிய வகை கொரோனாவை நாம் எதிர்கொள்ள முடியும்.

ஒமிக்ரான் வைரஸால் பாதிப்பு அடைந்தாலும் ஆக்சிஜன் தேவையோ, உயிரிழப்புகளோ இல்லாமல் தடுக்கலாம். கிருஷ்ணகிரி மருத்துவமனையில் இருந்த, 300 படுக்கைகளை, 600 படுக்கைகளாக அதிகப்படுத்தியுள்ளோம். அதேபோல் கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், 700 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன.

மாவட்டம் முழுவதும், 2,000 படுக்கைகளுக்கு மேல் தயார் நிலையில் உள்ளன. கொரோனா முதல் அலையும், இரண்டாவது அலையும் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளன. ஆக்சிஜன் பற்றாக்குறை, உயிரிழப்புகளும் அதிகமான இருந்தது. தற்போது உள்ள ஒமிக்ரான் வீரியம் குறித்து இன்னும் சில தினங்கள் கழித்தே தெரியவரும். அதற்கு முன்னர் பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசிகளை போட்டுக் கொள்ள வேண்டும்.

கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் தற்போது, 100 வெண்டிலட்டர்கள் மற்றும், 13 ஆயிரம் லிட்டர் திரவ ஆக்சிஜன் மற்றும் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரியில் நிமிடத்திற்கு, 1,000 லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் கருவியும் பொருத்தப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மருத்துவமனையில் தற்போது, 100 படுக்கைகள் மட்டும் கொரோனா வார்டுக்கு ஒதுக்கப்பட்ட நிலையில், 20 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர். எனவே புதிய வகை வைரசை கண்டு பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை. உடனடியாக தடுப்பூசி மற்றும் அரசு கட்டுப்பாட்டு விதிகளை கடைபிடித்து மூன்றாம் அலை, ஒமிக்ரான் வைரஸிலிருந்து காத்துகொள்ள பொதுமக்கள் முன்வர வேண்டும் என தெரிவித்தார்.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா