விற்பனை அதிகரிப்பால் கீரை சாகுபடியில் ஆர்வம் காட்டும் கிருஷ்ணகிரி விவசாயிகள்

கிருஷ்ணகிரி அடுத்த பெத்ததாளப்பள்ளி கிராமத்தில் கீரை சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள்.
கொரோனா பெருந்தொற்று பரவி அச்சுறுத்தி வரும் சூழலில், இந்த தொற்று கற்றுக்கொடுத்த பாடம், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சத்தான இயற்கை உணவுகளை சாப்பிட வேண்டும் என்பதாகும். குறிப்பாக, கீரை, காய்கறி, பழங்களை உண்பதால், நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்ற விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தி இருக்கிறது.
இதனால், இயற்கையான காய்கறிகள், பழங்கள், கீரைகள் போன்றவ்றறை வாங்குவதில் பொதுமக்கிடையே ஆர்வம் அதிகரித்துள்ளது. இதை உணர்ந்து கொண்ட விவசாயிகள், பொதுமக்களின் ஆர்வம் மற்றும் தேவைகளை அறிந்து, அதற்கேற்றார் போல், சத்தான இயற்கையான உணவுப் பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர். கிருஷ்ணகிரி அடுத்த பெத்ததாளப்பள்ளி கிராமம் உள்ளிட்ட பகுதிகளில் கீரை சாகுபடி அதிகரித்துள்ளது.
இது குறித்து அப்பகுதி விவசாயி தமிழ்செல்வன் கூறியதாவது: நோய்எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், உடல் வலிமைக்கு தேவையான வைட்டமின்கள் அதிகரிக்கவும், குறைந்த செலவில் கிடைக்கும் உணவுப் பொருளாக கீரை உள்ளது. எனவே, தற்போது கீரை சாகுபடி செய்து வருகிறோம்.
அரை ஏக்கல் நிலத்தில் சிறுகீரை, தண்டுக்கீரை, பாலக்கீரை, அரைக்கீரை போன்றவற்றை சாகுபடி செய்து, அதை நாள்தோறும் அறுவடை செய்து விற்பனை செய்து வருகிறேன். 10 நாட்களில் பலன் தரக்கூடிய இந்த கீரைகளை சாகுபடி செய்ய விதைகள், உரங்கள் என ரூ. 10 ஆயிரம் மூலதனமாக கொண்டு இந்த கீரைகளை பயிரிட்டு, அதை அறுவடை செய்து, சிறுசிறு கட்டுகளாக கட்டி ஒரு கட்டு ரூ. 5 முதல் ரூ. 10 வரை விற்பனை செய்கிறோம்.
இதன்மூலம் நாள்தோறும் ரூ.500 வரை வருமானம் கிடைக்கிறது. இவ்வாறு மூன்று மாதங்கள் தொடர்ந்து அறுவடை செய்வதால் குறைந்தபட்சமாக ரூ. 45 ஆயிரம் வருவாய் ஈட்ட முடிகிறது என்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu