குண்டுமல்லி பூ விலை உயர்வு : கிருஷ்ணகிரி விவசாயிகள் மகிழ்ச்சி
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், சுமார் ஆயிரம் ஏக்கர் பரப்பளவிற்கு மேல் குண்டுமல்லி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக கிருஷ்ணகிரி அணை பாசன பகுதிகளான திம்மாபுரம், அவதானப்பட்டி, நாட்டான்கொட்டாய், சின்னமுத்தூர், பெரியமுத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் மட்டும், 500 ஏக்கருக்கும் மேல் குண்டுமல்லி சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
இங்கு விளையும் குண்டுமல்லி பூக்களை தினமும் விற்பனைக்காக பெங்களூர், ஈரோடு, மேட்டுபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சென்ட் தொழிற்சாலைகளுக்கு அனுப்பி வைப்பதை, விவசாயிகள் வழக்கமாக கொண்டுள்ளனர். கொரோனா தொற்றால் தொடர்ந்து ஊரடங்கு அமலில் இருந்ததால், எவ்வித விசேஷ நிகழ்ச்சிகளும் நடைபெறாததாலும், பூக்களின் தேவைகள் இல்லாததாலும், கிலோ ரூ.60 முதல் ரூ.80 வரை மட்டுமே விற்பனையானது. இதனால் விவசாயிகள் பெரும் வேதனையடைந்தனர்.
இந்நிலையில் கொரோனா தளர்வுகள் அறிவிக்கப்பட்டதாலும், வாசனை திரவிய தொழிற்சாலைகள் திறக்கப்பட்டதாலும், குண்டுமல்லி பூக்களின் தேவை அதிகரித்தது. இதையடுத்த பூக்களின் விலையோ தற்போது கிலோ ரூ.400 முதல் ரூ.500 வரை விற்கப்படுகிறது. அத்துடன், ஆடி மாதம் என்பதாலும், கோவில்கள் திறக்கப்பட்டுள்ளதாலும் பூக்களின் தேவை அதிகரித்துள்ளதால், அவற்றின் விலையில் அதிகரித்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu