மருத்துவமனைகளில் படுக்கைகள் பற்றாக்குறை இல்லை : கலெக்டர் தகவல்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் படுக்கைகள் பற்றாக்குறை இல்லை - கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தகவல்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு, தனியார் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கு படுக்கைகள் பற்றாக்குறை இல்லை எனவும், 503 படுக்கைகள் காலியாக உள்ளது என மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா நோய் தடுப்பு தொடர்ச்சியாக பொதுமக்களின் நலன் கருதி, தமிழ்நாடு அரசின் வழிக்காட்டு நெறிமுறைகளை பின்பற்றி மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் அதிகரித்தல் மற்றும் ஆக்சிஜன் வசதிகள் அதிகரிப்பு உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் முககவசம் அணிவது, சமூக இடைவெளி கடைபிடிப்பது தொடர்பாக சிறப்பு பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.
பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைகளில் கொரோனா நோய் தொற்று மற்றும் அறிகுறி கண்டறியப்பட்டவர்கள் என மொத்தம் 389 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது 245 காலி படுக்கைகள் உள்ளது. தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் 539 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது, 259 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது. கொரோனா நோயாளிகளுக்கு படுக்கைகள் பற்றாக்குறை இல்லை.
மேலும், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் மொத்தம் 501 ஆக்சிஜன் உருளைகள், 19 ஆயிரம் லிட்டர் திரவ பிராணவாயு கொள்ளவு கலன் பயன்பாட்டில் உள்ளது. எனவே, பொதுமக்கள் முககவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைப்பிடித்து தேவையான மற்றும் இன்றியமையாத பணிகளுக்கும் மட்டும் வெளியே சென்று பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu