அரசு வேலை வாங்கித்தருவதாக ரூ.5.65 லட்சம் மோசடி: இளம்பெண் கைது

அரசு வேலை வாங்கித்தருவதாக ரூ.5.65 லட்சம் மோசடி: இளம்பெண் கைது
X

மோசடியில் ஈடுபட்ட சுபலட்சுமி.

கிருஷ்ணகிரியில் அரசு வேலை வாங்கி தருவதாகக் கூறி ரூ.5.65 லட்சம் பெற்று போலி உத்தரவு நகல் வழங்கிய இளம்பெண் கைது செய்யப்பட்டார்.

கிருஷ்ணகிரி லண்டன்பேட்டையை சேர்ந்தவர் சங்கர். இவரது மனைவி சத்யா. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பொம்மண்டபள்ளி பகுதியை சேர்ந்தவர் சுபலட்சுமி. இவர் கடந்த சில வருடங்கள் முன்பு வரை கிருஷ்ணகிரி கோ ஆப்பரேடிவ் காலனியில் வசித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் 10ம் வகுப்பு வரை ஒரே வகுப்பில் படித்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த, 2 வருடங்களுக்கு முன் சத்யாவை தொடர்பு கொண்ட சுபலட்சுமி தனக்கு அரசு அதிகாரிகளிடையே நல்ல பழக்கம் இருப்பதாகவும், அவர்களிடம் பணம் கொடுத்து அரசு வேலை வாங்கலாம் என மூளைச்சலவை செய்துள்ளார். அதனை நம்பி சத்யாவும் 4 லட்சத்து, 65 ஆயிரம் ரூபாய் பணத்தை சுபலட்சுமியிடம் கொடுத்துள்ளார்.

இதேபோல, சேலம் மாவட்டம், தம்மம்பட்டியை சேர்ந்த முத்தையன் என்பவரிடமும் 1 லட்ச ரூபாய் பெற்றுள்ளார். இவர்களிடம், வேலை ஓரிரு மாதங்களில் வந்துவிடும் என கூறியுள்ளார். இதனையடுத்து, கடந்த ஜூன் 21ம் தேதி, கிருஷ்ணகிரி தாலுகா அலுவலகம் முன்பு வேலைக்கான உத்தரவு நகலை அவர் வழங்கியுள்ளார்.

இதை பெற்றுக்கொண்டு கலெக்டர் அலுவலகம் சென்ற சத்யாவுக்கு அது போலியாக தயாரிக்கப்பட்டது என தெரிந்ததும் அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் அவர் அளித்த புகாரின்பேரில் சுபலட்சுமியை இன்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.

Tags

Next Story