கிருஷ்ணகிரி அருகே மரங்களை வெட்டி விற்பனை செய்த தலைவரின் கணவர்,பரபரப்பு
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஊராட்சி தலைவியின் கணவர் மரங்களை வெட்டி விற்பனை செய்து விட்டதாக புகார் தெரிவிக்க வந்த ஊர் பொதுமக்கள்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள கோபனப்பள்ளி ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் இன்று, தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் ராமகவுண்டர் தலைமையில் கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டியிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.
அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: கோபனப்பள்ளி ஊராட்சி மன்றத் தலைவராக இருப்பவர் கீதா. இவரது கணவர் சங்கரப்பா என்பவர்,
தன்னை பஞ்சாயத்து தலைவர் என கூறிக்கொண்டு கூலிசந்திரம் கிராமத்தில் சாலையோரம் உள்ள இருபுறமும் இருந்த சுமார் 100 மரங்களை, சாலையை விரிவுப்படுத்துகிறேன் என கூறி வேரோடு அகற்றியும், வெட்டியும் கடத்தி சென்று விற்பனை செய்தார்.
இதை தட்டி கேட்ட விவசாயிகளை மிரட்டியுள்ளார். இது குறித்த தாசில்தார் மற்றும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஏற்கனவே 40 அடி அகலம் உள்ள இந்த சாலையை விரிவுப்படுத்த வேண்டிய அவசியமும் இல்லை. அத்துடன் விவசாய நிலங்கள் பாதிக்கும் வகையில் மண் அள்ளப்படுகிறது.
இவற்றை தடுத்து நிறுத்துவதுடன், எவ்வித அனுமதியும் இல்லாமல் மரங்களை வெட்டிய ஊராட்சி மன்றத் தலைவரின் கணவரான சங்கரப்பா மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu