புதுப்பொலிவு பெற்றது ஓசூரில் ராஜகோபாலாச்சாரியார் படித்த அரசுப்பள்ளி
ஓசூரில் ராஜகோபாலாச்சாரியார் படித்த பள்ளி புதுப்பொலிவு பெற்றதையொட்டி முப்பெரும் விழா நடத்தப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள ஆர். வி. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 165 ஆண்டுகள் ஆன பின் தற்போது ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்களின் பங்களிப்புடன் ரூ. 20 லட்சம் மதிப்பில் புதிய பொலிவுடன் திகழ்கிறது.
ஆர். வி. அரசு பள்ளி 1855 ம் ஆண்டு துவக்கப்பட்டு 165 ஆண்டுகள் பாரம்பரியம் மிக்கது.
சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் ராஜகோபாலாச்சாரியார் இப்பள்ளியின் முன்னாள் மாணவர் என்பது பெருமைக்குரிய விஷயம். மேலும் இப்பள்ளியில் பயின்ற மாணவர்கள் கல்வி, மருத்துவம், நீதித்துறை, காவல்துறை, தொழில்துறை, அரசியல்துறை என பல துறைகளிலும் முன்னேறி உள்ளனர்
கிராமப்புற மற்றும் நகர்ப்புற மாணவர்களின் நம்பிக்கையை பெற்ற சிறந்த தரமான கல்வியறிவு செய்து வாழ்வில் முன்னேற்றம் அடைய வைத்த இப்பள்ளியை மேலும் பொலிவுறச் செய்ய சுமார் 2 ஆண்டு கொரோனா காலங்களில் மாணவர்கள் இல்லாத சூழ்நிலையை பயன்படுத்தி பள்ளியை சீர்படுத்தும் நோக்கத்துடன் ஆசிரியர்கள், ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் பொதுமக்கள் என ஒன்று சேர்ந்து சுமார் 20 லட்சம் ரூபாய் திரட்டி சேறும் சகதியுமாக இருந்த தரைக்கு சிமெண்ட் தளங்கள் அமைத்தும் பூத்துக்குலுங்கும் மலர் செடிகள் புதிய வகையான மரங்கள் அமைத்து பள்ளியின் சுற்றுச்சூழலை மேன்மைப் படுத்தும் நோக்கத்தில் அழகு படுத்தினர்
மேலும் ஆங்காங்கே சிதிலமடைந்த சுவர்கள் மற்றும் மேற்கூரைகள் சரி செய்து வர்ணம் தீட்டினர். இதனால் பள்ளி புதிய பொலிவுடன் காணப்படுகிறது இப்பள்ளி.
அதுமட்டுமில்லாமல் மாணவர்களை கண்காணிப்பதற்காக ஆங்காங்கே சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டு தலைமையாசிரியர் அறையில் கண்காணிக்கும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது
தற்போது இப்பள்ளியில் 1400 பேர் பயில்கின்றனர், இங்கு 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை தமிழ், தெலுங்கு, கன்னடம், ஆங்கிலம் மற்றும் சிறுபான்மையினர் பயில உருதும் கற்றுத்தரப்படுகிறது. இதன் காரணமாக இந்த வருடம் தனியார் பள்ளியில் இருந்தும் ஏராளமான மாணவர்கள் அரசுப் பள்ளியில் சேர்ந்து கல்வி பயில்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்பள்ளியில் செவ்வாய்க்கிழமை முப்பெரும் விழா சிறப்பாக நடைபெற்றது. இதில் ஓசூர் சட்டமன்ற உறுப்பினர், கல்வித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் நடைபெற்ற மாணவிகளின் பரதநாட்டியம் அனைவராலும் பாராட்டப்பட்டது
தமிழக அரசின் கொரானா விதிமுறைப்படி தற்போது பள்ளியில் சமூக இடைவெளியுடன் முக கவசம் அணிந்தவாறு மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu