குருபரப்பள்ளியில் முன்னாள் பஞ்சாயத்து தலைவியின் கணவர் மீது எஸ்பியிடம் புகார்
கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் எஸ்பியிடம் குருபரப்பள்ளியின் முன்னாள் பஞ்சாயத்து தலைவியின் கணவர் மீது புகார் செய்த பொதுமக்கள்.
கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அம்மன் நகரில் வசித்து வரும் கோமளா என்பவர், பொது வழிப்பிரச்சனையில் முன்னாள் பஞ்சாயத்து தலைவியின் கணவர் கொலை மிரட்டல் விடுத்ததாக பொதுமக்களுடன் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார்.
அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: குருபரப்பள்ளி அம்மன் நகரில் 12 அடி அகல பொதுவழிப்பாதை பிரச்சனை நீண்டகாலமாக இருந்து வருகிறது. அங்கு எனது கணவர் பெயரில் 22 சென்ட் நிலம் உள்ளது. அந்த நிலத்தில் நாங்கள் வீடு கட்டி வருகிறோம்.
பொதுவழிக்காக நாங்களும், அருகில் உள்ள முனுசாமி என்பவரும் தலா 6 அடி வீதம் 12 அடியை பொது வழிக்காக விடுவதாக ஒப்புக்கொண்டோம்.
அதில் முனுசாமி தரப்பினர், நிலம் சீராக இல்லை என்றும், எங்களது தரப்பிலேயே பொது வழிக்கு இடம் கொடுக்க வேண்டும் எனவும், அதற்காக ரூ.5 லட்சம் கொடுப்பதாக கூறிய நிலையில் பணமும் தராமல், பொது வழிக்கு இடமும் தராமல் முனுசாமி தரப்பு மறுத்துவிட்டது.
பொது வழிப்பாதையில் எங்களது தரப்பில் 7 அடி இடம் விட்டு, நாங்கள் வீடு கட்டி வரும் நிலையில், முன்னாள் பஞ்சாயத்து தலைவி ஜெயலட்சுமியின் கணவர் மணி(எ)சுப்பிரமணி, அடியாட்களுடன் வந்து மிரட்டுகிறார்.
எங்கள் குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் விடுத்து, எங்களது பட்டா நிலத்தை ஆக்கிரமித்துள்ளனர். எனவே, அவர் மீது நடவடிக்கை எடுத்து, எங்களது உயிருக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த 20ம தேதி பொதுவழிப்பாதையை ஆக்கிரமித்துள்ள கோமளாவின் கணவர் கோவிந்தராஜை தட்டி கேட்ட தன்னை, மண்டையை உடைத்துவிட்டதாக முன்னாள் பஞ்சாயத்து தலைவியின் கணவர் சுப்பிரமணி மாவட்ட எஸ்பியிடம் தனது ஆதரவாளர்களுடன் வந்து புகார் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu