சிப்காட் அமைக்க விவசாய நிலத்தை கையகப்படுத்த கூடாது: கலெக்டரிடம் மனு
கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்த விவசாயிகள்.
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டியிடம், சூளகிரி தாலுகா பகுதியை சேர்ந்த விவசாயிகள் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி தாலுகா கோனேரிப்பள்ளி பஞ்சாயத்து நல்லகாணகொத்தப்பள்ளி மற்றும் குண்டுகுறுக்கி கிராமங்களில் 450 வீடுகள் உள்ளன. இங்குள்ளவர்கள் அனைவரும் விவசாயத்தை பிரதான தொழிலாக கொண்டுள்ளனர்.
குண்டுகுறுக்கி சாலையின் மேற்கு புறத்தில் செட்டிப்பள்ளி காடு வரை எங்களுக்கு பட்டா நிலம் உள்ளது. இதில், சுமார் 150 அடியில் இருந்து 300 அடிவரை ஆழ்துளைக் கிணறு அமைத்து காய்கறிகள் உள்ளிட்ட விவசாயங்களை செய்து வருகின்றோம். அனைத்து ஆழ்துளைக் கிணறுகளுக்கும் இலவச மின்சாரம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் தட்கல் முறையில் மின்சாரம் பெற கடந்த ஆட்சியில் 50 விவசாயிகள் வரை பணம் கட்டியுள்ளனர்.
தற்போது தட்கல் முறையில் பணம் கட்டியவர்களுக்கு மின் இணைப்பு கொடுத்து வருகின்றனர். மேலும், கெலவரப்பள்ளி அணை இடதுபுற வாய்க்கால் மூலம் அனைத்து நிலங்களும் பாசன வசதி பெற்று வருகிறது. வேளாண்மை துறையின் மூலம் வாய்க்கால் வசதி செய்து அனைத்து பயிர்களும் செய்து வருகின்றோம். இதில் தென்னை, மா, பலா உள்பட பல்வேறு வகையான மரங்களும் வளர்க்கப்பட்டுள்ளன.
இவ்வாறு விவசாயத்தை மட்டுமே பிரதானமாக கொண்ட நிலத்தை சிப்காட் அமைக்க கையகப்படுத்த அரசு முயற்சி செய்து வருகிறது. இதனால் விவசாயிகள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். அவ்வாறு நிலம் எடுத்தால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிப்பு அடைந்து தற்கொலை செய்யும் நிலைக்கு தள்ளப்படுவார்கள். எனவே குண்டுகுறுக்கி மற்றும் நல்லகாணகொத்தபள்ளி விவசாயிகளின் நிலத்தை சிப்காட் அமைக்க எடுக்காமல் விவசாயிகளின் குடும்பத்தை காப்பாற்ற வழிவகை செய்ய வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu