ஓசூர் பகுதியில் 6000 ஏக்கர் கோவில் நிலங்கள் மீட்க நடவடிக்கை: ராதாகிருஷ்ணன் பேட்டி
ஒசூர் பகுதிகளில் உள்ள இந்து கோவில்களுக்கு சொந்தமான இடத்தின் வழியாக பாதை ஏற்படுத்தி சென்ற டிப்பர் லாரிகளை திருதொண்டர் சபையின் நிறுவனர் ராதாகிருஷ்ணன் பறிமுதல் செய்து போலீசாரிடம் ஒப்படைத்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பகுதியில் உள்ள கோவிலுக்குச் சொந்தமான 6000 ஏக்கர் நிலங்களை மீட்பதற்க்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருதொண்டர்கள் தலைவர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
ஒசூர் பகுதிகளில் உள்ள இந்து கோவில்களுக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு நிலங்கள் குறித்து திருதொண்டர் சபையின் நிறுவனர் ராதாகிருஷ்ணன் ஒசூரில் இரண்டு நாட்களாக ஆய்வு மேற்கொண்டார்.
ஓசூர் அருகே பாகலூர் அடுத்த கூலிகானப்பள்ளி என்னுமிடத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான 26 ஏக்கர்கள் நிலம் விவசாயத்திற்கு குத்தகை விடப்பட்டுள்ள போதும், கல்குவாரிக்கு லாரிகள் சட்டவிரோதமாக பாதையை பயன்படுத்தி வந்ததால் இரண்டு எம்சாண்ட் லாரிகளை பறிமுதல் செய்து போலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராதாகிருஷ்ணன், தமிழகத்தில் உள்ள திருக்கோயில்களுக்கு சொந்தமான நிலங்களை சட்டவிரோத ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டெடுப்பதற்காக தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தை பொறுத்தவரையில் இது ஐந்தாவது தடையாக இன்று பார்வையிட்டுள்ளேன்.
ஏற்கனவே கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பே அந்த இடத்தினைப் பார்வையிட்டபோது, இந்த இடத்தினை சட்டவிரோதமாக சாலை அமைத்து சொத்து அழிப்பு செய்துள்ளார்கள். அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளவும், வேலி அமைக்கவும் தெளிவாக அறிவுறுத்தப்பட்டது.
ஆனால் இந்த இடத்தின் வழியாக அத்துமீறி இரண்டு வாகனங்கள் வந்ததும், தற்போது கைப்பற்றப்பட்டு காவல்துறை வசம் ஒப்படைக்கப்பட்டது என்று தெரிவித்தார். மேலும் சம்பந்தப்பட்டவர்கள் மீது குற்றவியல் மற்றும் துறை ரீதியான நடவடிக்கை எடுப்பதற்கு அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் என்றார்.
அதேபோல தமிழகத்தில் அதிகமான சொத்துக்கள் இருக்கக்கூடிய பகுதி கிருஷ்ணகிரி மாவட்டம். குறிப்பாக ஓசூருக்கு தமிழகத்தில் மிக மிக விலை உயர்ந்த மதிப்புள்ள இடங்கள் இந்த பகுதியில்தான் உள்ளது. சுமார் 6 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் இந்த பகுதியில் மீட்கப்பட வேண்டியது. இந்த நிலங்கள் அனைத்தும் முறையாக மீட்கப்படும்.
இங்கு நிறைய குற்றவாளிகளுக்கு உடந்தையாக இருக்கக்கூடிய கூட்டுக் கொள்ளையர்கள் இந்த துறையிலேயே தொடர்ந்து பணியாற்றி வருவதால் சரியான ஒரு வெற்றியை காண முடியாமல் உள்ளது. அவர்களை களை எடுப்பதற்காக கண்டிப்பாக அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் என்று தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu