கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விநாயகர் சிலைகள் அமைக்க சி.சி.டி.வி. கேமரா கட்டாயம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விநாயகர் சிலைகள் அமைக்க சி.சி.டி.வி. கேமரா கட்டாயம்
X

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், விநாயகர் சதுர்த்தி சிலைகள் அமைக்க வழிக்காட்டு நெறிமுறைகள் குறித்த கூட்டம் மாவட்ட ஆட்சியர் கே.எம்.சரயு தலைமையில் நடைபெற்றது.

Krishnagiri News Today: கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், விநாயகர் சதுர்த்தி சிலைகள் அமைக்க வழிக்காட்டு நெறிமுறைகள் குறித்த கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், விநாயகர் சதுர்த்தி சிலைகள் அமைக்க வழிக்காட்டு நெறிமுறைகள் குறித்த கூட்டம் மாவட்ட ஆட்சியர் கே.எம்.சரயு தலைமையில் நடைபெற்றது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்ததாவது:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், சிலைகள் அமைக்க அந்தந்த பகுதி சார் ஆட்சியர் அல்லது கோட்டாட்சியர் ஆகியோரிடம் மனு அளித்து அனுமதி பெற்றிருக்கவேண்டும். நிறுவப்படும் சிலைகள் 10 அடிக்கு மேல் உயரம் கொண்டதாக இருக்கக் கூடாது. சிலை அமைக்கப்படும் இடங்களில் சி.சி.டி.வி. கேமரா பொருத்தப்படவேண்டும்.

சிலையமைக்கும் இடம் தனியாருடைய இடமாக இருப்பின், நிலத்தின் உரிமையாளரிடம், சம்மதம் தெரிவித்த தடையின்மை சான்றும், பொது அல்லது வேறு துறை சார்ந்த இடத்தில் வைப்பதாக இருப்பின், சம்மந்தப்பட்ட துறையின் ஒப்புதல் பெறப்பட வேண்டும்.

தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினரால் தகுந்த தீத்தடுப்பு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதற்கான சான்றும் பெற்றிருக்க வேண்டும்.மேலும், மின்சார வாரியத்தில், மின் இணைப்பு எங்கிருந்து பெறப்படுகிறது என்பதற்கான சான்றும் இணைக்கப்பட வேண்டும்.

நிறுவ இருக்கின்ற விநாயகர் சிலையானது சுத்தமான களிமண்ணால் செய்யப்பட்டவையாக இருக்க வேண்டும். பிளாஸ்டர் ஆப் பாரிஸ் போன்ற பொருட்களை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட மற்றும் தடைசெய்யப்பட்ட பூச்சுக்களைக் கொண்டு வண்ணம் தீட்டப்பட்ட சிலைகளையோ அல்லது தீங்கு விளைவிக்கக் கூடிய பூச்சுக்களை என்று தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தால் பட்டியலிடப்பட்ட வண்ணப் பூச்சுக்களால் அலங்கரிக்கப்பட்ட சிலைகளை பயன்படுத்தக் கூடாது.

நீரில் கரையும், மனித மற்றும் மற்ற உயிர்களுக்கு தீங்கு விளைவிக்காத பூச்சுக்களால் அலங்கரிக்கப்பட்ட மற்றும் தானாக மக்கும் தன்மையுள்ள பொருட்களால் ஆன சிலைகளை பயன்படுத்த வேண்டும்.

சிலைகள் நிறுவ அமைக்கப்படும் கொட்டகை எளிதில் தீப்பிடிக்காத பொருட்களைக் கொண்டு நுழைவிடம் மற்றும் வெளியேறும் இடம் ஆகியவை தனித்தனியாக வைத்து போதுமான இடவசதியுடன் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். முதலுதவி மற்றும் தீத்தடுப்பு உபகரணங்கள் இக்கொட்டகையில் தயாராக வைத்திருக்க வேண்டும்.

வழிபாட்டுத் தளங்கள், மருத்துவமனைகள் மற்றும் கல்விக் கூடங்களுக்கு அருகாமையிலும், மக்களின் எதிர்ப்புகள் உள்ள இடங்களிலும் சிலைகள் வைத்து வழிபாடு நடத்தக் கூடாது.

மீயொலி எழுப்பும் மற்றும் கூம்பு வடிவ ஒலிப்பெருக்கிகளை பயன்படுத்தக் கூடாது. மாறாக பெட்டி வடிவ ஒலிப்பெருக்கிகளை மட்டுமே குறைந்த ஒலியுடன் வைத்துக்கொள்ள வேண்டும். மேலும், ஒலிப்பெருக்கிகள் பயன்படுத்த உரிமம் பெற்று பயன்படுத்த வேண்டும். காலையில் 2 மணி நேரமும், மாலையில் 2 மணி நேரமும் மட்டுமே ஒலிபெருக்கியை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

சிலை நிறுவும் குழுவில் உள்ள ஏற்பாட்டாளர் உள்ளிட்ட நபர்கள் யாரும் சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது. முக்கியமாக மின்சாரத்தை சட்ட விரோதமாக உபயோகிக்கக் கூடாது. ஏதேனும் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தையோ அல்லது குறிப்பிட்ட அரசியல் கட்சியையோ முன்வைத்து பதாகைகள் வைக்கக் கூடாது.

விழா ஏற்பாட்டாளர் எந்நேரமும் 2 நபர்கள் சிலையின் பாதுகாப்புக் கருதி சிலை வைக்கப்பட்டுள்ள கூடாரத்தில் ஆஜரில் இருக்குமாறு ஏற்பாடு செய்திருக்க வேண்டும். எந்ததெந்த நாட்களில் யார் யார் ஆஜரில் இருப்பது என்ற விவரத்தை அருகிலுள்ள காவல் நிலையத்தில் தொடர்பு எண்ணுடன் தெரிவிக்க வேண்டும். காலத்தை எதிர்கொள்ள ஜெனரேட்டர் கருவி வைத்து மின் துண்டிப்பை சரிசெய்து கொள்ள வேண்டும். சிலை நிறுவப்படும் இடத்தில் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்த வேண்டும். சமூக பதட்டம் மற்றும் பிற மத மற்றும் நம்பிக்கைகளை குழைக்கும் விதமாகவோ அல்லது சாதி மற்றும் மத உணர்வுகளை தூண்டும் விதமாகவோ கோஷங்கள் எழுப்பக் கூடாது.

விழா ஏற்பாட்டாளர்கள் பொது அமைதி மற்றும் சமூக நல்லிணக்கத்தை கருதி வருவாய்த் துறை,, காவல் துறை, உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் தமிழ் நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் உள்ளிட்ட அரசுத் துறைகளால் விதிக்கப்படும் நிபந்தனைகளை பின்பற்றி நடந்துகொள்ள வேண்டும். நிறுவப்படும் சிலைகளை 5 நாட்களுக்குள் நீர்நிலைகளில் கரைத்து விட வேண்டும். சிலைகளை நண்பகல் 12.00 மணிக்குள் எடுத்து, அனுமதிக்கப்பட்ட நபர்களுடன், அனுமதிக்கப்பட்ட பாதையில், அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டும் சென்று விதிகளுக்குட்பட்ட கரைக்க வேண்டும்.

நன்கு ஒடும் நிலையிலுள்ள நான்கு சக்கர வாகனங்களை மட்டுமே சிலைகளை கரைக்கும் இடத்திற்கு எடுத்துச் செல்ல பயன்படுத்த வேண்டும். மாட்டு வண்டி, மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் மீன் வண்டிகள் எதையும் பயன்படுத்தக் கூடாது. மேலும், வாகனத்தில் 4 நபர்களை மட்டுமே ஏற்றிச் செல்ல வேண்டும். குறிப்பாக பள்ளி மாணவர்கள், குழந்தைகளை அழைத்துச் செல்ல கூடாது.

வாகனத்தில் ஏற்றிச் செல்லும் நபர்கள் மோட்டார் வாகனச் சட்டத்தின் படி மட்டுமே அனுமதிக்க முடியும் என்பதால், மோட்டார் வாகனச் சட்டத்தைபின்பற்றி சிலைகளை எடுத்துச் செல்ல வேண்டும். சிலைகளை எடுத்துச் செல்லும் போதும், கரைக்கும் போதும் பொதுமக்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு பட்டாசு மற்றும் வெடிகள் வெடிக்க அனுமதியில்லை.

சிலையை கரைக்க செய்யும் முன் எளிதில் கரையாத மற்றும் தீங்கு விளைவிக்கக்கூடிய பொருட்களை நீக்கிய பின்பே கரைக்க வேண்டும். மேற்படி நீக்கிய பொருட்களை தனியாக சேகரிக்கப்படும் குப்பைத் தொட்டியில் போட்டுவிட வேண்டும். மக்காத தன்மையுள்ள பொருட்களை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

சிலை தயாரிப்பாளர்கள் தகுந்த உரிமம் பெற்று அரசால் அனுமதிக்கப்பட்ட பொருட்களை மட்டும் வைத்து சிலை தயாரிப்பில் ஈடுபட வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. அவ்வாறு தயாரிக்கும் சிலை 10 அடிக்கு மிகாமலும், தடைசெய்யப்பட்ட பூச்சுக்கள் பயன்படுத்தாமலும் இருக்க வேண்டும்.

சிலை கரைப்பு மையத்தைச்சுற்றி பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட வேண்டும். அடியில் செயற்கை கோடுகள் ( Synthetic liner ) அமைக்க வேண்டும். நிகழ்ச்சி முடிந்தவுடன் அவற்றை அழித்து விட வேண்டும். மூங்கில் மற்றும் மரக்கட்டைகளை சேனிடரி லேன்ட்பில்லிற்கு கொண்டுவந்து அழிக்க வேண்டும். உள்ளாட்சி அமைப்புகள் சிலை கரைத்த 48 மணி நேரத்திற்குள் சிலை கரைத்த இடத்தில் உள்ள பொருட்களை சேகரித்து அழிக்க வேண்டும்.

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், கரைப்பதற்கு முன்பு, கரைக்கும் பொழுது, கரைத்த பின்பு தண்ணீரின் தரத்தை சோதிக்க வேண்டும். போதுமான பிரதிநிதித்துவம் கிடைக்கும் வகையில் நீர்நிலையின் அளவிற்கு ஏற்ப போதுமான மாதிரி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும;. PH,DO,BOD, COD Conductivity, Turbidity, TDS, Total solids and Metals (Chromium, Lead, Zink Copper) ஆகிய இயற்பியல் வேதி அளவீடுகளை பரிசோதனை செய்து நீரின் தரத்தை உறுதி செய்ய வேண்டும்.

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தால் கீழ்க்கண்ட நீர் நிலைகளில் விநாயகர் சிலை கரைக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

ஊத்தங்கரை வட்டத்தில் சிங்காரப்பேட்டை பெரிய ஏரி, ஊத்தங்கரை பாம்பாறு அணை, கல்லாவி தென்பெண்ணையாறு, பர்கூர் வட்டத்தில் மஞ்சமேடு தென்பெண்ணையாறு, கிருஷ்ணகிரி வட்டத்தில், கிருஷ்ணகிரி அணை, கும்மனுர் தென்பெண்ணையாறு, குருபரப்பள்ளி எண்ணேக்கோல்புதுார் தென்பெண்ணையாறு, வேப்பனப்பள்ளி கொத்துார் ஏரி, ஓசூர் வட்டத்தில், ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட சந்திராம்பிகை ஏரி, ராமநாயக்கன் ஏரி, அட்கோ பகுதியில் கெலவரப்பள்ளி அணை, மத்திகிரி பகுதியில் அச்செட்டிப்பள்ளி ஏரி மற்றும் கர்நுார் ஏரி, சிப்காட் பகுதியில் சந்தாபுரம் ஏரி, பாகலூர் பகுதியில் தென்பெண்ணையாறு, சூளகிரி வட்டத்தில் துரை ஏரி, தேன்கனிக்கோட்டை வட்டத்தில் பட்டாளமண் ஏரி, பென்னங்குர் ஏரி, தளி வட்டாரத்தில் கௌரம்மா ஏரி மற்றும் சின்னட்டிஏரி ஆகிய நீர் நிலைகளில் மட்டுமே சிலைகளை கரைக்க வேண்டும்.

தேசிய பசுமை தீர்ப்பாயம், சென்னை வழக்கு எண். 129/2023(SZ), நாள் 05.09.2023 நாளிட்ட தீர்ப்பில் மாவட்ட நிர்வாகம் பின்வரும் நடைமுறைகள் கடைப்பிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன் விவரம்:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சிலைகள் கரைக்கப்படும் இடங்களில் குடிநீர் மற்றும் பிற நோக்கங்களுக்காக தற்போதுள்ள ஏரிகள் / நீர்நிலைகளில் ஏதேனும் ஒன்றைப் பாதுகாப்பது குறித்து உள்ளாட்சி துறை மற்றும் பொதுப்பணித்துறை (நீர்வள மேலாண்மை) ஆகியோர் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

மேற்குறிப்பிட்ட இடங்களை தவிர வேறு எந்த நீர்நிலைகளிலும் சிலைகள் கரைக்கப்படமால் இருப்பதை உறுதி செய்ய உள்ளாட்சி துறை மற்றும் பொதுப்பணித்துறை (நீர்வள மேலாண்மை) ஆகியோருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் ஏதேனும் விதிமீறல்கள் இருந்தால் Polluter Pay- யின் கீழ் அபராதம் விதிக்க உள்ளாட்சி துறையினருக்கு அறிவுரை வழங்கப்படுகிறது.

சிலைகளை கரைக்க அனுமதிக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நீர்நிலைகளில் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் வழிகாட்டுதலின்படி மக்கும் பொருட்களை மட்டுமே பயன்படுத்துவதை உள்ளாட்சி துறையினர் உறுதி செய்ய வேண்டும். எனவே பொதுமக்கள் விநாயகர் சதுர்த்தி சிலைகள் அமைக்க மேற்குறிப்பட்ட வழிக்காட்டு நெறிமுறைகளை கடைபிடித்து மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

இவ்வாய்வு கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .சரோஜ்குமார் தாகூர், மாவட்ட வருவாய் அலுவலர் சாதனைக்குறள், மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் (பொது) வேடியப்பன், ஓசூர் மாநகராட்சி ஆணையாளர் சினேகா, ஓசூர் சார் ஆட்சியர் சரண்யா, கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர் பாபு, உதவி இயக்குநர் (ஊராட்சி) மகாதேவன் மற்றும் துனை காவல் கண்காணிப்பாளர்கள், வட்டாட்சியர்கள், இந்து முன்னனி நிர்வாகிகள், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கலந்துக்கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!