கிருஷ்ணகிரி அருகே மாவட்ட அளவில் சிலம்பம் போட்டி: 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
காவேரிப்பட்டணம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற சிலம்பாட்டப் போட்டிகள்.
கிருஷ்ணகிரி மாவட்ட சிலம்பாட்டக் கழகத்தின் சார்பில், காவேரிப்பட்டணம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட அளவிலான சிலம்பாட்டப் போட்டிகள் நடைபெற்றது.
மிக இளையோர் பிரிவில், 25, 30, 35, 40, 45, 50 மற்றும், 50 கிலோவிற்கு மேல் எடை பிரிவுகளிலும், இளையோர் பிரிவில், 34, 38, 42, 46, 50, 54, 60, 65, 70 மற்றும், 70 கிலோவிற்கு மேல் எடை பிரிவுகளிலும், மூத்தோர் பிரிவில், 45, 50, 55, 60, 70, 80 மற்றும், 80 கிலோவிற்கு மேல் எடை பிரிவுகளில் போட்டிகள் நடந்தது. போட்டியில், 300க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
வெற்றி பெற்றவர்களுக்கு டி.எஸ்.பி., விஜயராகவன், பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார். இதில், மாவட்ட செயலாளர் பவுன்ராஜ், பயிற்சியாளர்கள் சந்தோஷ், சூர்யா, கீர்த்தி உள்பட பலர் பங்கேற்றனர். இப்போட்டியில் முதல் பரிசு பெற்றவர்கள் வரும் டிச., 18ல் சிவகங்கை மாவட்டத்தில் நடைபெறும் மாநில போட்டிகளில் கலந்துகொள்ள உள்ளனர்.
இப்போட்டியில் பங்கேற்ற வீரர்களிடம் இருந்து சிலம்பாட்டக் கழகம் சார்பில் தலா 300 ரூபாய் வசூலித்துள்ளனர். ஆனால் தண்ணீர் மற்றும் உணவு வசதி எதுவும் செய்யவில்லை என பல பெற்றோர்கள் புகார் தெரிவித்தனர்.
இது குறித்து சிலம்பாட்ட கழக மாவட்ட செயலாளர் பவுன்ராஜிடம் கேட்ட போது, காலை முதல் குடிநீர் வசதி செய்யப்பட்டிருந்தது. ஆனால் எப்போதும் உணவு நாங்கள் வழங்குவதில்லை. போட்டியை நடத்தவும், நடுவர்களுக்கு வழங்கவும்தான் பணம் வசூலிக்கப்பட்டது என்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu