கிருஷ்ணகிரி அருகே 12ம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டு கண்டுபிடிப்பு
கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டு.
கிருஷ்ணகிரி மாவட்ட அரசு அருங்காட்சியகமும், மாவட்ட வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவும் இணைந்து, கிருஷ்ணகிரி மாவட்டம் ஐகுந்தம் கிராமத்தில், சதாம் என்பவர் அளித்த தகவலின் பேரில், கொல்லையில் கொட்டகை அமைத்து பாதுகாக்கப்பட்டு வரும் கல்வெட்டினை இன்று ஆய்வு செய்தனர்.
இக்கல்வெட்டு குறித்து அருங்காட்சியகக் காப்பாட்சியர் கோவிந்தராஜ் கூறுகையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிடைத்துள்ள முதலாவது முழு வணிகக்குழு கல்வெட்டு இதுவாகும். 7 அடிக்கு 4 அடி அளவுள்ள கற்பலகையின் இரண்டு பக்கமும் கோடுகள் வரைந்து அதனுள் எழுத்துக்களை 40 வரிகளில் அழகாக வெட்டியுள்ளனர். 12ம் நூற்றாண்டின் எழுத்தைக் கொண்ட இந்த கல்வெட்டின் முடிவில், சாமரம், பூர்ணகும்பம், குத்துவிளக்கு, பசுவும் கன்றும் ஆகிய உருவங்களை செதுக்கியுள்ளனர்.
வணிகக்குழுவினரின் ஒரு பிரிவினரான வளஞ்சியரின் வடமொழி மெய்கீர்த்தியோடு கல்வெட்டு தொடங்குகிறது. திருப்பெறு மாப்பளித் தளத்தை சேர்ந்த ஐநூற்றுவர் என்னும் வணிகக் குழுவினர், அய்ங்குன்றத்து மும்முரி தன்மசெட்டி என்பவன் பெயரில் வீரதாவளத்தை உருவாக்குகின்றனர். வீரதாவளம் என்பது வணிகர்களைக் காக்கும் படைவீரர்கள் தங்கும் இடமாகும். பெருநிரவியார் நாட்டு செட்டிகள், கொங்கவார் எழுநூறு, கண்டழி, மூலபத்திரர் ஐம்பொழில், களமடக்கி, கீர்மேற்காக்கை, நானாதேசி ஆகிய வணிகக் குழுக்கள் குறிப்பிட்டுள்ளனர். அரசர்கள் வைத்துக்கொள்ளும் கொற்றக்கொடை, முன்னூறு படைவீரர்கள் ஆகியவற்றை இவர்கள் என்றும் வைத்துக்கொள்ள உரிமை பெற்றவர்கள்.
கவர்ந்து சென்ற கால்நடைகளை மீட்கும் போரில் தன்மசெட்டி, சிறியதம்பப்பன் மற்றும் இவனது தமையனும் இறந்துவிட்டனர். இவர்களது உயிர்த்தியாகத்தை போற்றும் வகையில் இவ்வீரதாவளம் திருப்பெறு மாடப்பள்ளித் தளத்து ஐநூற்றுவர் என்ற வணிகக் குழுவினரால் உருவாக்கப்பட்ட செயதியை இக்கல்வெட்டு தெரிவிக்கிறது. இக்கல்வெட்டின் வாயிலாக ஐகுந்தம் என தற்போது அழைக்கப்படும் ஊர் அய்ங்குன்றம் என அழைக்கபட்டது என அறிகிறோம்.
மேலும், இது வணிகர்கள் பயணம் மேற்கொள்ளும் பண்டைய பெருவழியில் அமைந்துள்ளது என்பதையும், அவ்வாறு பயணம் மேற்கொள்ளும் வணிகர்களின் தங்கும் இடமாகவும் இருந்துள்ளதையும் அறிகிறோம். அவ்வாறு தங்கியிருப்போரின் செல்வத்தை காக்கும் போர் வீரர்களும் உடன் தங்கியிருந்தனர். அவ்வாறு தங்கியிருக்கும்போது அவர்களின் கால்நடைகளை கள்வர்கள் கவர்ந்து சென்றுவிட, அதனை மீட்கும் போரில் வீரர்களில் சிலர் இறந்துவிட, அவர்களது நினைவாக வீரர்கள் தங்கும் இடத்தை இவ்வணிகக் குழுவினர் உருவாக்கியுள்ள செய்தியை இக்கல்வெட்டுத் தெரிவிக்கிறது. தமிழக வணிகக்குழுக் கல்வெட்டுக்களில் அய்குந்தம் வணிகக்குழுக் கல்வெட்டு சிறப்பிடம் பெறும் ஒன்றாக உள்ளது. இக்கல்வெட்டு இம்மாவட்டத்துக்கு கிடைத்த மற்றுமொரு சிறப்பாகும் என அவர் தெரிவித்தார்.
இந்த ஆய்வில், தர்மபுரி அகழ்வைப்பக தொல்லியல் அலுவலர் பரந்தாமன், வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும்குழு ஒருங்கிணைப்பாளர் தமிழ்செல்வன், விஜயகுமார் ஆகியோர் உடன் இருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu