ஆசிரியர் திட்டியதால் மனமுடைந்த மாணவன் தற்கொலை
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த ஒட்டத்தெரு கிராமத்தை சேர்ந்த சாந்தகுமாரின் இளைய மகன் கார்த்திக் (17). இவர் போச்சம்பள்ளி அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் கணிதப்பிரிவில் 12ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று 12ம் வகுப்பிற்கான தாவரவியல் தேர்வு (Slip Test) வைத்துள்ளார் தாவரவியல் ஆசிரியர் சகாதேவன். தெரிந்த கேள்விகளுக்கு பதில் எழுதிவிட்டு பின்னர் தெரியாத கேள்விகளுக்கு சினிமா பாடலை பதிலாக எழுதியுள்ளார் கார்த்திக்.
தேர்வு முடிந்து விடை தாளை திருத்தும்போது மாணவரின் பாடலை அனைத்து மாணவர்கள் முன்பு படித்து காட்டி கிண்டல் செய்துள்ளார் ஆசிரியர் சகாதேவன். மேலும் அவ்வழியே வந்த வேதியியல் ஆசிரியர் மயில்வாகனனிடம் காட்டி கிண்டல் செய்துள்ளார். பின்னர் அனைத்து ஆசிரியர்களிடமும் இச்சம்பத்தை தெரிவித்து கார்த்திக்கின் மதிப்பெண்ணை குறைப்பதாக பேசியுள்ளனர்.
அப்போது கார்த்திக் இரு ஆசிரியரிடமும் இனிமேல் இதுபோன்ற தவறு செய்ய மாட்டேன் என மன்னிப்பு கோரியுள்ளான். ஆனால் இரு ஆசிரியர்களும் கார்த்திக்கை பள்ளியை விட்டு வெளியேறுமாறும் பெற்றோர்களை அழைத்துக் கொண்டுதான் பள்ளிக்கு வரவேண்டுமென கூறி பள்ளியை விட்டு வெளியேற்றியுள்ளனர்.
அழுதுக்கொண்டே பள்ளியை விட்டு வெளியேறிய மாணவன் ஒட்டத்தெருவில் உள்ள அவனது வீட்டிற்கு சென்று தனது குடும்பத்தினரிடையே நடந்த சம்பவத்தை கூறியுள்ளான். இவனது தந்தை வந்ததும் பள்ளிக்கு சென்று பேசிக்கொள்ளலாம் என தாயார் சமாதானப்படுத்தியிருந்தார். ஆனால் நேற்று இரவு அனைவரும் தூங்கிய பிறகு தூக்கு போட்டு தற்கொலை செய்துக்கொண்டார் கார்த்திக்.
நடு இரவு அவனது அறையை அவரது சகோதரி பார்த்தபோது தூக்கில் தொங்கியது தெரியவந்தது. பின்னர் இறந்த கார்த்திக்கின் உடலை இரவோடு இரவாக பெற்றோர் மற்றும் பொதுமக்கள் எரித்து விட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து போச்சம்பள்ளி காவல்துறையினர் விசாரனை மேற்கொண்டுள்ளனர். ஆசிரியர் கிண்டல் செய்து பள்ளியை விட்டு வெளியேற்றியதால் மனமுடைந்த மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu