தமிழகத்துக்கு அநீதி இழைக்கும் கேரள அரசு- 'டிஜிட்டல் ரீ சர்வே' வுக்கு விவசாயிகள் எதிர்ப்பு

தமிழகத்துக்கு அநீதி இழைக்கும் கேரள அரசு- டிஜிட்டல் ரீ சர்வே வுக்கு விவசாயிகள் எதிர்ப்பு
X

‘டிஜிட்டல் ரீ சர்வே’ செய்ய, கேரள அரசுக்கு தமிழக விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ( கோப்பு படம்)

Farmers Protest News -ஏற்கனவே, வனவளம் மிகுந்த தமிழக பகுதிகளை அபகரித்துக்கொண்ட கேரள அரசு, மீண்டும் தமிழகத்துக்கு அநீதி இழைக்க, 'டிஜிட்டல் ரீ சர்வே' வுக்கு தயாராகி வருவதாக, தமிழக விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Farmers Protest News -கடந்த 1956 மொழிவழி பிரிவினை சட்டம் அமல்படுத்தப்பட்ட பிறகு, தமிழகத்திலிருந்து தட்டிப்பறிக்கப்பட்ட 1400 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு உதவியுடன்,1957 ல் தான் புதிய கேரளம் உருவானது.

ஆனால் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியம், அன்றே தமிழக எல்லையை தெளிவாக வரையறை செய்து, 'வடவேங்கடந் தென்குமரியாயிடைத் தமிழ் கூறும் நல்லுலகத்து' என்று கூறுகிறது. அதாவது, 'வடவேங்கடம்' என்றழைக்கப்படும் இன்றைய திருப்பதிக்கும், 'தென்குமரி' என்றழைக்கப்படும் இன்றைய கன்னியாகுமரிக்கு தெற்கே கடல் கொண்டழிந்து போன லெமூரியாவுக்கும் இடைப்பட்ட பகுதியையே, 'பழைய தமிழகம்' என எல்லையாக உருவகம் கொடுக்கிறது.

ஆனால், இத்தனையாண்டு பழமை கொண்ட ஒரு நாடு, நேற்று உருவான அல்லது உருவாக்கப்பட்ட கேரளாவிடம் 1956 மொழிவழி பிரிவினையில், எப்படி 1400 சதுர கிலோ மீட்டர் பரப்பளவை இழந்தது என்பதை நினைக்கும்போது, அத்தனை ஆச்சரியமாக இருக்கிறது.

அதற்கு பிறகாவது தமிழகம் விழித்திருக்க வேண்டும். மொழிவழிப்பிரிவினையால் தமிழகம் இழந்த பகுதிகளான தேவிகுளம், பீர்மேடு, உடுமஞ்சோலை ஆகிய மூன்று தாலுாகாக்கள் தான், இன்றைக்கு கேரள மாநில வரி வருவாயில் 12 விழுக்காடு வரை, வரியாக, வாரி வழங்கிக்கொண்டிருக்கிறது.

வனவளம் மிகுந்த நெய்யாற்றின்கரை, நெடுமங்காடு, செங்கோட்டை தாலுாகாவின் மேற்கு பகுதி எல்லாம் இன்றைக்கு கேரள மாநிலத்திற்கான அட்சய பாத்திரங்கள்.

செங்கோட்டை தாலுாகாவின் மேற்கு பகுதியில் உள்ள தென்மலை வனப்பகுதி இன்றைக்கு தமிழகத்தோடு இருந்திருக்குமென்றால், 'கல்லடா' என்றொரு ஆறு, கேரளாவிற்கு கிடைத்திருக்காது. அந்த ஆற்றை தமிழகத்தின் பக்கம் திருப்பியிருந்தால், தென்காசி மாவட்டத்தின் சுரண்டை, சங்கரன்கோவில், திருவேங்கடம் பகுதிகள் மூன்று போகம் விளைச்சலை கண்டிருக்கும்.

அதுபோல சிவகிரி தாலுாகாவிலுள்ள வாசுதேவநல்லூரின் மேற்கு பகுதியில் அமைந்திருக்கும் செண்பகவல்லி கால்வாய் தண்ணீரை தமிழகம் இழந்திருக்காது. கரிவலம் வந்த நல்லூர் முப்போகம் விளைந்திருக்கும். அதுபோல முல்லைப்பெரியாறு, கல்லாறு, முதிரப்புழா, பம்பையின் ஒரு பகுதி தண்ணீர், ஆனையிரங்கல் அணை தண்ணீர், மாட்டுப்பட்டி, குண்டல அணைத்தண்ணீரை தேனி மாவட்டம் இழந்திருக்காது

இத்தனை நீர்வளத்திலிருந்தும் குறைந்தது 100 டி எம் சி தண்ணீர் தமிழகத்திற்கு கிடைத்திருக்கும். அதுபோல அமராவதி அணைக்கு மஞ்சம்பட்டி பள்ளத்தாக்கில் இருந்து வரும் தண்ணீரோடு, மூணாறு அருகே ஆண்டுதோறும் தண்ணீர் வழிந்தோடும் பெரிய பாறை தண்ணீரும் இணைந்திருந்தால்,பவானி கூடுதுறை வற்றாத ஜீவநதியாகியிருக்கும்.

தமிழகத்தின் இரண்டாவது பெரிய பாசனமான பவானிப்பாசனை்தோடு, எங்கோ கேரளாவிற்குள் வேண்டா வெறுப்பாய் வழிந்தோடும் எங்கள் மோயாற்றை ,தெங்குமரஹடா வழியாக திரும்பியிருந்தால்,காவிரிக்கு இணையான இன்னொரு பாசனம் தமிழகத்திற்கு கிடைத்திருக்கும்.

நிலத்தின் மீது தமிழகத்திற்கு அக்கறை ஏற்படாமல் போனது மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது. இவ்வளவு நிலத்தை கேரள அரசு 'கபளீகரம்' செய்யும்போது, நம்மால் சண்டையிட முடியவில்லை. 'சர்வே ஆப் இந்தியா' வின் மேற்பார்வையில்தான் 'டிஜிட்டல் ரீ சர்வே' நடத்தப்படுகிறது என்கிற கேரள வருவாய்த்துறை அமைச்சர் ராஜனின் வாதம், நம்பகத்தன்மையுடையது அல்ல.

தமிழகத்திற்கும் கேரளத்திற்குமிடையிலான 822 கிலோ மீட்டர் தூரம் முறையாக, இன்னமும் அளவீடு செய்யாமல் கிடப்பில் போடப்பட்டிருக்கும் நிலையில், எந்த அடிப்படையில் கேரளாவில் உள்ள 14 மாவட்டங்களிலும் மறு அளவீடு செய்ய முடியும் என்ற கேள்வி எழுகிறது.

கம்பம் மெட்டு உச்சியில் உள்ள கேரள காவல் துறையின் எல்லைச் சோதனை சாவடி, தமிழக எல்லைக்குள் இருக்கிறது என்று ஆணித்தரமாக நிரூபித்து, ஆண்டு ஐந்தாகி விட்டது. அதை மீளத்திரும்பப்பெற தமிழகத்திற்கு துணிவில்லாமல் போனது. எல்லையை அளவீடு செய்யாமல், கேரள மாநில அரசால் திட்டமிட்டு நடத்தப்படும் இந்த 'டிஜிட்டல் ரீ சர்வே', இன்னொரு மொழிவழி பிரிவினை காலத்திற்கு சமமாகவே இருக்கும் என்பதில் எனக்கு ஐயமில்லை. ஏனென்றால் 'சர்வே ஆப் இந்தியா' வின் மேற்பார்வையில் இது நடக்கிறதென்றால் அதற்கு வேறு எந்த அர்த்தமும் இருந்துவிட முடியாது.

கேரளாவில் உள்ள 14 மாவட்டங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 200 கிராமங்களில், 'குளோபல் நேவிகேஷன் சாட்டிலைட் சிஸ்டம்' திட்டத்தின் மூலம் ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றும் அறிவித்திருக்கிறார்கள். கூடுதலாக நீர்நிலைகள் மற்றும் சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலங்கள் தனியாக வரைபடங்களின் மூலம் வகைப்படுத்தப்படும் என்றும் அறிவித்திருக்கிறார்கள். ஆனால் அண்டை மாநிலத்தோடு எல்லையை அளவீடு செய்வதில் மட்டும் கேரள அரசுக்கு உடன்பாடில்லை.

இது குறித்து பெரியாறு, வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர்பாலசிங்கம் கூறியதாவது: நான்கு ஆண்டுகளுக்குள் மொத்த கேரளாவையும், அளவிட திட்டமிருக்கும் கேரள மாநில வருவாய்த் துறையின் நோக்கம் மிகுந்த சந்தேகத்திற்கு உட்பட்டது. ஒரு சதிச்செயலை தமிழக நிலங்களுக்கு எதிராக அரங்கேற்றவே கேரள மாநில அரசு இந்த வேலையை தொடங்குகிறது.

அதைவிட அதற்காக அவர்கள் தேர்ந்தெடுத்த நாள் மிக முக்கியமான நாள்.அதாவது 1956 ல் எப்படி தமிழகத்தை வஞ்சித்து இதே நவம்பர் 1 ல் நவீன கேரளத்தை உருவாக்கினார்களே,அதே நவம்பர் 1 ம் தேதியில் இந்த 'டிஜிட்டல் ரீ சர்வே'யையும் தொடங்குகிறார்கள். ஆக கேரள அரசு அதிகாரிகள் எப்போதும் தெளிவாகவே இருக்கிறார்கள். கிராமப்பதிவுகள் முடிந்ததும், நில அளவை ஆவணங்கள், தகவல் தொழில்நுட்பம் மற்றும் நிலப்பரப்பின் விரிவான ஆவணத்தின் உதவியுடன் தொகுக்கப்படும் என்று அறிவித்திருக்கிறார்கள்.

1956 ல் தமிழக நிலங்களை அபகரிக்க எப்படி ஒரு கே.எம்.பணிக்கர் காரணமாக இருந்தாரோ, அப்படி ஒரு பணிக்கர் இப்போதும் கேரளாவிற்கு கிடைத்திருக்கிறார், அவர் பெயர் பினராயி விஜயன். தமிழக கேரள எல்லையோரங்களில்,பெருவாரியாக விவசாய நிலங்கள் வைத்திருக்கும் அப்பாவி தமிழ் விவசாயிகளுக்கு, இந்த சர்வே பெரும் இழப்பினை ஏற்படுத்தும். ஆளில்லா விமானங்கள், தொடர்ந்து செயல்படும் குறிப்பு நிலையங்கள், சுற்றுப்பயண நேரம் மற்றும் மின்னணு நிலையங்கள் ஆகியவற்றை செயற்கை கோளுடன் இணைக்கப்பட்டுள்ள 28 நாண் நிலையங்களின் சமிக்ஞைகள் மூலம் வரைபடமும்,ஓவியமும் தயாரிக்க போகிறார்கள். இதன் மூலம் தமிழகத்திற்கு பெரும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.

ஆனால் இதுவரை தமிழக முதல்வரிடமோ, தலைமைச் செயலாளரிடமோ இந்த 'டிஜிட்டல் ரீ சர்வே' குறித்து ஒரு வார்த்தை கூட கேரளா பேசவில்லை. இது ஒன்றும் கேரள அரசுக்கு புதிதில்லை. முன்பு அச்சுதமேனன் என்கிற ஒரு கம்யூனிஸ்ட், முல்லைப் பெரியாறு அணையில், ஐந்து மாவட்ட மக்களுக்கு எதிராக செய்த துரோகத்தை,இன்று 'டிஜிட்டல் ரீ சர்வே' என்கிற பெயரில் தமிழகத்தில் உள்ள 9 மாவட்ட மக்களுக்கு எதிராக செய்கிறார் பினராயி விஜயன்.

திட்டமிட்டபடி கேரளாவில், 'டிஜிட்டல் ரீ சர்வே' தொடங்கப்படும் அதே நவம்பர் 1 ம் தேதி, கம்பம் மெட்டில் முதல் எதிர்ப்பை பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கம் பதிவு செய்கிறது. இவ்வாறு கூறியுள்ளார்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!