காவிரி ஆற்றில் சட்டத்துக்கு புறம்பாக மணல் திருட்டு: பொதுமக்கள் புகார்

காவிரி ஆற்றில் சட்டத்துக்கு புறம்பாக மணல் திருட்டு: பொதுமக்கள் புகார்
X

மணல் கொள்ளை - காட்சி படம் 

மணல் அள்ளுபவர்கள் குறித்து தகவல் அளித்தும் அதிகாரிகள் மணல் கொள்ளையை தடுத்து நிறுத்தவில்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டு

தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகளில் முறைகேடு நடப்பதாக கூறி அமலாக்கத்துறையினர் ஆய்வு நடத்தி வருகின்றனர். இதன் காரணமாக கரூரில் பல மணல் குவாரிகள் செயல்பட வில்லை. இதனால் கரூர் சுற்று வட்டார பகுதிகளில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி தோட்டக்குறிச்சி காவிரி ஆற்றில் சிலர் சட்ட விரோதமாக இரவு நேரத்தில் லாரிகளில் கடத்துகின்றனர்.

இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் காவல்துறை மற்றும் அதிகாரிகளுக்கு புகார் அளித்தனர். அதன்பேரில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தோட்டக்குறிச்சி காவிரி ஆற்றுக்கு சென்று மணல் அள்ளிய இடங்களை ஆய்வு செய்தனர். தொடர்ந்து ஆற்றுக்கு செல்லும் பாதையில் வாகனங்கள் செல்லாத வகையில் குழி பறித்து வைத்தனர். ஆனால் மணல் கொள்ளையர்கள் அந்த குழியை மூடி பாதையை சரி செய்து தொடர்ந்து மணல் அள்ளி வருகின்றனர்.

மணல் கொள்ளை தொடர்பாக வருவாய் துறை மற்றும் பொதுப்பணித்துறை, காவல்துறை ஆகியோருக்கு தொடர்ந்து தகவல் அளித்தும் மணல் அள்ளுபவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதுகுறித்து தோட்டக்குறிச்சி பகுதி பொதுமக்கள் கூறும்போது, தோட்டக்குறிச்சியை சேர்ந்த ஒருவர் இங்குள்ள காவிரி கரை ஓரம் செங்கல் சூளை வைத்துள்ளார். இவர் இரவில் மாட்டு வண்டியில் மணல் அள்ளி தனது இடத்தில் கொட்டி வைக்கிறார்.

அதை நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் உழவர்பட்டியை சேர்ந்த ஒருவர் தனது லாரி மூலம் அள்ளி செல்கிறார். அரசுக்கு இழப்பு ஏற்படுத்தும் வகையில் மணல் அள்ளுபவர்கள் குறித்து தகவல் அளித்தும் அதிகாரிகள் மணல் கொள்ளையை தடுத்து நிறுத்தவில்லை. இதனால் அவர்களும் இதற்கு உடந்தையாக இருப்பார்களோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஏற்கனவே காவிரி கரையில் இதுபோல் திருட்டு மணல் அள்ளிய குழிகள் அனைத்தும் தற்போது புதை குழிகளாக மாறி உள்ளது. இதில் சிக்கி ஆற்றில் குளிக்க சென்ற வெளியூரை சேர்ந்த பலர் இறந்துள்ளனர். இருந்தும் மணல் அள்ளுபவர்கள் திருந்தவில்லை. அதை வருவாய்த்துறை அதிகாரிகள், பொதுப்பணித்துறை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகளும் தடுக்கவில்லை என்று குற்றம் சாட்டுகின்றனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!