ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு இடைக்கால விசாரணை அறிக்கையை வெளியிட கோரிக்கை
இது குறித்து தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் முகிலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.
2018- டிசம்பர் முதல் தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம் உட்பட பல்வேறு அமைப்புகள் பலமுறை வெளியிட வலியுறுத்தி கோரிய, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக அமைக்கப்பட்ட நீதியரசர் அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையத்தின் இடைக்கால அறிக்கை இரண்டரை ஆண்டுகள் கழித்து இன்று தமிழக அரசிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசு இதை எப்பொழுது வெளியிடும் என்பதை உடனே வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.
காரணம் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஏற்படுத்தப்பட்ட கலவரம் தொடர்பாக 2017-ல் அமைக்கப்பட்டு, கடந்த ஓராண்டுக்கு முன்பே அரசிடம் தாக்கல் செய்யப்பட்ட "நீதியரசர் ராஜேஸ்வரன் விசாரணை ஆணையம் அறிக்கை" அரசிடம் தாக்கல் செய்யப்பட்டு பலமுறை அரசை வலியுறுத்தி கேட்டும் இன்றுவரை அறிக்கை வெளியிடப் படவில்லை.
இன்றுவரை கடந்த 4 ஆண்டுகாலமாக பொய்யாகப் புனையப்பட்ட ஜல்லிக்கட்டு போராட்ட வழக்குகளில் நூற்றுக்கணக்கானோர் நீதிமன்றங்களுக்கு அலைந்து வருகின்றனர்.
2013-இல் தாது மணல் கொள்ளை தொடர்பாக "ககன்தீப் சிங் பேடி ஐஏஎஸ்" அவர்கள் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கை அரசிடம் தாக்கல் செய்யப்பட்டு ஏழாண்டு காலம் ஆகியும் இதுவரை வெளியிடப்படவில்லை.
2014-இல் உயர் நீதிமன்றத்தால் அமைக்கப்பட்டு 1,11,000 கோடி முறைகேடு கண்டறியப்பட்ட, மதுரை மாவட்ட கிரானைட் முறைகேடு தொடர்பாக ஆட்சியராக இருந்த "உ.சகாயம் அவர்கள் தலைமையில் அமைக்கப்பட்ட ஆய்வுக்குழு" 2015 நவம்பரில் அறிக்கை தாக்கல் செய்தும், அந்த அறிக்கையும் 6 ஆண்டுகளாக இன்று வரை அந்த அறிக்கை வெளியிடப் படவில்லை.
ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு பற்றிய உண்மையை, ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு காலதாமதமின்றி, உடனடியாக நீதியரசர் அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையத்தின் இடைக்கால அறிக்கையை, பொதுவெளியில் வெளியிட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu