தோகைமலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை அரசு மருத்துவமனையாக மாற்ற கோரிக்கை

தோகைமலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை  அரசு மருத்துவமனையாக மாற்ற கோரிக்கை
X
மருத்துவர்கள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் பற்றாக்குறை காரணமாக தோகைமலை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அரசு மருத்துவமனையாக மாற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கரூர் மாவட்டம், தோகைமலையில் 30 படுக்கை வசதிகளுடன் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் தோகைமலை, கழுகூர், சின்னயம்பாளையம், நாகனூர், கீழவெளியூர், பாதிரிப்பட்டி, பில்லூர், பொருந்தலூர், புத்தூர் ஆகிய ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் பயனடைந்து வருகின்றனர். இந்த சுகாதார நிலையத்தில் 8 மருத்துவர்கள் பணியாற்ற வேண்டும். ஆனால் தற்போது 3 மருத்துவர்கள் மட்டுமே இருந்து வருகின்றனர்.

இ்ங்கு கர்ப்பிணிகளுக்கு ஸ்கேன் எடுக்கும் வசதி, ரத்த பரிசோதனை, எக்ஸ்ரே ஆகிய வசதிகள் மட்டுமே உள்ளது. இதனால் பெரிய விபத்துகள் ஏதாவது ஏற்பட்டால் முதலுதவிக்கு பின்னர் திருச்சி, மணப்பாறை போன்ற பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளுக்கு தான் செல்ல வேண்டி உள்ளது. இதனால் பொதுமக்களுக்கு வீணான அலைச்சலும், நேர விரயமும் ஏற்பட்டு வருகிறது. இதனால் மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையத்தை தரம் உயர்த்த அரசு நடவடிக்கை எடுக்க அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது:

தோகைமலை சுகாதார நிலையத்திற்கு மாதந்தோறும் 400-க்கும் மேற்பட்ட கர்ப்பிணிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். கர்ப்பிணிகளுக்கு பிரசவத்தின்போது ஏதாவது பிரச்சினை காரணமாக அறுவை சிகிச்சை செய்ய நேர்ந்தால் அதனை செய்ய முடியவில்லை. இதனால் அவர்கள் 30 கிமீ தொலைவில் உள்ள திருச்சி, குளித்தலை, கரூர், மணப்பாறை போன்ற நகரங்களில் உள்ள மருத்துவமனைகளுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. அப்படியே அங்கு சென்றாலும், அங்கு 20-க்கும் மேற்பட்ட கர்ப்பிணிகள் முன்கூட்டியே இருக்கின்றனர். இதனால் கர்ப்பிணிகள் மிகவும் அவதி அடைந்து வருகின்றனர்..

தோகைமலை பகுதியில் விபத்து ஏற்பட்டு, அதில் படுகாயம் அடைபவர்களை தோகைமலை சுகாதார நிலையத்திற்கு கொண்டு வந்தாலும், இந்து முதலுதவி சிகிச்சை மட்டுமே அளிக்க முடிகிறது. மருத்துவர்கள் பற்றாக்குறை மற்றும் உயர்தர சிகிச்சை அளிக்க உபகரணங்கள் இல்லாததால், தொலைதூரத்தில் உள்ள வெவ்வேறு இடங்களுக்கு சிகிச்சைக்காக செல்ல வேண்டிய நிலை உள்ளது. சிலர் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே இறந்து விடுகின்றனர். இதனால் சுகாதார நிலையத்தில் உயர்தர சிகிச்சை அளிக்க உபகரணங்கள் வழங்க வேண்டும்.

தோகைமலையில் பின்தங்கிய பொதுமக்களே அதிகம் வசித்து வருகின்றனர். இங்கிருக்கும் ஒரே மருத்துவமனை இந்த சுகாதார நிலையம் தான் இவர்களுக்கு பெரும் உதவியாக இருக்கிறது. இந்த பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு ஏதாவது சிறிய நோய் ஏற்பட்டாலும் இந்த சுகாதார நிலையத்தை நாடி வருகிறோம். தனியார் மருத்துவமனைக்கு செல்ல பொருளாதார வசதி இல்லை. வாழ்வாதாரம் இல்லாமல் தினமும் குடும்பம் நடத்தவே சிரமப்பட்டு வருகிறோம். இதனால் தோகைமலையை மையமாக வைத்து பொதுமக்கள் நலன்கருதி சுகாதார நிலையத்தை தரம் உயர்த்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தோகைமலை சுகாதார நிலையத்தை தரம் உயர்த்த வேண்டும் என கடந்த 2005-ம் ஆண்டு முதல் அரசியல் கட்சி தலைவர்கள், பல்வேறு துறை அதிகாரிகளை சந்தித்து மனு வழங்கினோம். பலகட்ட போராட்டங்களை நடத்தியும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட மருத்துவத்துறை அதிகாரிகள் இந்த சுகாதார நிலையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்து அதிகப்படியான மருத்துவர்களை பணி அமர்த்தி, மருத்துவ உபகரணங்களை வழங்கியும், சுகாதார நிலையத்தை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினர்.

Tags

Next Story
2025 ஆம் ஆண்டில் ஏர்போட்ஸ் ப்ரோ 3வது தலைமுறைக்கான ஆப்பிள் அறிமுகப்படுத்துமா...? ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது....!