அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோவில் சித்திரை தேரோட்டம்; வடம் பிடித்து தேர் இழுத்த பக்தர்கள் பரவசம்

அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோவில் சித்திரை தேரோட்டம்; வடம் பிடித்து தேர் இழுத்த பக்தர்கள் பரவசம்
X

 Karur News,Karur News Today-அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோவிலில் சித்திரை தேரோட்டம் நடைபெற்றது.

Karur News,Karur News Today-அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோவிலில் சித்திரை தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, பக்தி பரவசத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

Karur News,Karur News Today - கரூர் மாவட்டம், குளித்தலை அருகே அய்யர்மலையில் உள்ள ரத்தினகிரீஸ்வரர் கோவில் காவிரியின் தென்கரையில் அமையப்பெற்றுள்ள சிவதலங்களில் முதன்மையானது. மேலும் பாடல் பெற்ற சிவதலமான இந்த கோவில் பல்வேறு வகையிலும் சிறப்பு வாய்ந்தது.

ஆண்டுதோறும் சித்திரை மாதம் இக்கோவிலில் திருவிழா மற்றும் தேரோட்டம் நடத்தப்படுவது வழக்கம். அதேபோல இந்தாண்டு திருவிழாவிற்காக கடந்த 21-ம் தேதி முகூர்த்தக்கால் ஊன்றப்பட்டது.இதையடுத்து கடந்த 25-ம் தேதி இக்கோவில் மலைஉச்சியில் உள்ள கோவில் கொடிக் கம்பத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கொடிக்கம்பத்தில் திருவிழாவிற்கான கொடி ஏற்றப்பட்டது. பின்னர் அன்று இரவு புஷ்ப விமானத்தில் சுவாமி புறப்பாடு நடைபெற்றது. கடந்த 29-ம் தேதி திருக்கல்யாணம் மற்றும் சுந்தரருக்கு பொற்கிழியளித்தல் நிகழ்ச்சி நடந்தது.

அதுபோல திருவிழா தொடங்கியதில் இருந்து ஒவ்வொரு நாளும் பகலில் பல்லக்கிலும், இரவில் நந்தி, கமல வாகனம், பூத, சிம்ம, கைலாச, சேஷ, வெள்ளி ரிஷப வாகனம், காமதேனு, யானை, ஹம்ச, இந்திர, குதிரை வாகனம் மற்றும் புஷ்ப பல்லக்கில் சுரும்பார்குழலி உடனுறை ரத்தினகிரீஸ்வரர் உற்சவமூர்த்திகள் எழுந்தருளி 4 கிலோமீட்டர் சுற்றளவு கொண்ட இக்கோவில் மலையை சுற்றி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.

திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று காலை நடைபெற்றது. இதையொட்டி நேற்று சுரும்பார்குழலி உடனுறை ரத்தினகிரீஸ்வரர் உற்சவ சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. பின்னர் பூக்களால் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடத்தப்பட்டது. இதையடுத்து அலங்கரிக்கப்பட்ட தேரில் சுவாமிகள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர். காலை 6.45 மணிக்கு மேல் தேரை வடம் பிடித்து இழுக்க தேரோட்டம் நடைபெற்றது. விவசாயிகள் தங்கள் நிலங்களில் விளைந்த பொருட்களை கோவில் தேரிலும், தேர் செல்லும் பகுதிகளிலும் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றிக் கொள்ளும் வகையில் கொட்டி வந்தனர். பலர் மலை உச்சிக்கு சென்று சுவாமியை வழிபட்டனர்.

தேரோட்ட நிகழ்வில், அரசியல் கட்சி பிரமுகர்கள், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள், கோவில் குடிபாட்டுக்காரர்கள், பிற மாவட்டங்கள் மற்றும் குளித்தலையை சுற்றியுள்ள பல்வேறு கிராமப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இத்திருவிழாவையொட்டி இக்கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில் பல்வேறு அமைப்புகள், பொதுமக்கள் சார்பில் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. திருவிழா காண வந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தேரோட்டத்தையொட்டி போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இக்கோவிலில் இருந்து நேற்று (புதன்கிழமை) காலை இழுக்கப்பட்ட தேர், மீண்டும் நாளை (வெள்ளிக்கிழமை) மாலை கோவில் நிலையை வந்தடைகிறது.

Tags

Next Story