கரூரில் தொடரும் காவல் துறையினரின் மனிதாபிமான செயல்பாடுகள் : குவியும் பாராட்டு

கரூரில் தொடரும் காவல் துறையினரின்  மனிதாபிமான செயல்பாடுகள் : குவியும்  பாராட்டு
X

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே டூவீலர் பஞ்சராகி நள்ளிரவில் சாலையில் நின்ற குடும்பத்தினருக்கு உதவிய போலீஸ் இன்ஸ்பெக்டர் நாவுக்கரசு. 

கரூர் அருகே குளித்தலையில் டூவீலர் பஞ்சராகி ஊருக்கு போகமுடியாமல் சாலையில் தவித்த குடும்பத்தினருக்கு உதவிய போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு பாராட்டு குவிகிறது.

மாமனாரின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள கோவையிலிருந்து இரு சக்கர வாகனத்தில் மனைவி, இரண்டு குழந்தைகளுடன் சென்றவரின் வாகனம் குளித்தலை அருகே பஞ்சராகி மழையில் நனைந்தவாறு செய்வதறியாது திகைத்து நின்றவருக்கு ரோந்து சென்ற காவல் ஆய்வாளர் மனிதாபிமானத்துடன் நண்பரின் கார் மூலம் அவர்களை திருச்சிக்கு அனுப்பி வைத்ததை பலரும் பாராட்டி வருகின்றனர்.

திருச்சியைச் சேர்ந்தவர் கணேஷ். கோயம்புத்தூரில் மனைவி, இரண்டு குழந்தைகளுடன் தங்கி வேலை பார்த்து வருகிறார். நேற்று முன் தினம் திருச்சியில் கணேஷின் மாமனார் உயிரிழந்துவிட்டார்.

இதையடுத்து, ஊரடங்கால் பேருந்து இல்லாத நிலையில், கணேஷ் தனது மனைவி, இரண்டு குழந்தைகளுடன் தனது இரு சக்கர வாகனத்திலேயே திருச்சிக்கு சென்று கொண்டிருந்தார்.

திருச்சிக்கு 30 கிலோமீட்டர் முன்பாக குளித்தலை என்ற இடத்தில் இரு சக்கர வாகனம் பஞ்சராகி நின்றுவிட்டது. மழை வேறு பெய்து கொண்டிருந்தது. கணேஷ் குடும்பத்தினர் செய்வதறியாது திகைத்து நின்றனர்.

அப்போது அந்த வழியாக இரவு ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த குளித்தலை போக்குவரத்து காவல் ஆய்வாளர் நாவுக்கரசு கொட்டும் மழையில் நின்று கொண்டிருந்த அவர்களைக் கண்டு விசாரித்த போது, அப்பாவின் இறப்புக்கு சென்று கொண்டிருந்த போது வாகனம் பஞ்சர் ஆகிவிட்டது என தெரிவித்துள்ளனர்.

மழை நேரம் பஞ்சர் ஒட்டும் வாய்ப்பு இல்லாததால் காவல் ஆய்வாளர் நாவுக்கரசு தனது நண்பர் விஜய் மக்கள் இயக்க தலைவர் சதாசிவத்தை அழைத்து விவரத்தை கூறி, சதாசிவத்தின் கார் மூலமே அந்த குடும்பத்தை திருச்சியில் அவர்கள் இல்லத்தில் விட்டுவிட்டு வருமாறு கேட்டுக் கொண்டார்.

சதாசிவமும், அதை ஏற்றுக் கொண்டு உடனடியாக அவர்களை கார் மூலம் அழைத்துச் சென்று திருச்சியில் அவருடைய இல்லத்தில் சேர்த்தார்.

ஊரடங்கு காலத்தின் இக்கட்டான சூழ்நிலையில் உதவி செய்த காவல் ஆய்வாளர் நாவுக்கரசு, விஜய் மக்கள் இயக்க தலைவர் சதாசிவம் ஆகியோரை பலரும் பாராட்டி வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!