உதவித்தொகை பெற மூத்த தமிழறிஞர்கள் விண்ணப்பிக்கலாம்: கரூர் கலெக்டர்

உதவித்தொகை பெற மூத்த தமிழறிஞர்கள் விண்ணப்பிக்கலாம்: கரூர் கலெக்டர்
X
கரூர் மாவட்டத்தில், அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று, மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து, கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில், முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் ஆண்டுதோறும் செயற்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்கீழ் 2021-2022 ஆம் ஆண்டிற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

இதற்கு, 58 வயது நிறைவடைந்து, ஆண்டு வருவாய் ரூ 72 ஆயிரத்துக்குள் இருக்க வேண்டும். வட்டாட்சியர் அலுவலகத்தில் இணைய வழியில் பெறப்பட்ட வருமானச்சான்று, தமிழ்ப்பணி ஆற்றியமைக்கான ஆதாரங்கள் மற்றும் தமிழ்ப்பணி ஆற்றி வருவதற்கான தகுதிநிலைச் சான்று, தமிழறிஞர்கள் இரண்டு பேரிடம் பெற்று விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டும்.

விண்ணப்பப்படிவத்தை நேரிலோ அல்லது தமிழ் வளர்ச்சித் துறையின் வலைத்தளத்திலோ ( www.tamilvalarchithurai.com ) இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இத்திட்டத்தின்கீழ் தெரிவு செய்யப்படுபவருக்கு மாதந்தோறும் உதவித்தொகையாக ரூ. 3500, மருத்துவப்படி ரூ. 500 வாழ்நாள் முழுவதும் வழங்கப்படும்.

நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்களை, கரூர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் மாவட்டத் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தில் 31.08.2021 க்குள் செலுத்த வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி