சொந்த செலவில் வாய்க்காலை தூர் வாரும் விவசாயிகள்

சொந்த செலவில் வாய்க்காலை தூர் வாரும் விவசாயிகள்
X

நடுப்பட்டி பகுதியிலிருந்து செல்லும் சிறிய பாசன வாய்க்காலை சொந்த செலவில் தூர் வாரும் விவசாயிகள்.

குளித்தலை அருகே 4 கிலோமீட்டர் புதர் மண்டி கிடக்கும் பாசன வாய்க்காலை விவசாயிகள் சொந்த செலவில் தூர்வாரி வருகின்றனர்.

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே மருதூர் பேரூராட்சிக்குட்பட்ட நடுப்பட்டி பகுதியில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் உள்ளது. இதில் நெல், வாழை, கரும்பு உள்ளிட்டவை பயிரிடப்படுகிறது. இந்த விவசாய நிலங்களுக்கு மாயனூரிலிருந்து தாயனூர் வரை செல்லும் கட்டளை மேட்டு வாய்க்காலில் இருந்து வரும் தண்ணீர் நடுப்பட்டி பகுதியிலிருந்து செல்லும் சிறிய பாசன வாய்க்கால் மூலம் கிடைக்கும்.

இந்த பாசன வாய்க்கால் சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவிற்கு கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக தூர்வாரப்படாமல் உள்ளது. பல முறை அரசுக்கு கோரிக்கை விடுத்த நிலையில், தற்பொழுது விவசாயிகள் ஒன்றிணைந்து விவசாய நிலங்களுக்கு பாசன தண்ணீர் கொண்டு செல்வதற்காக தாங்களாகவே பாசன வாய்க்காலை ஜேசிபி இயந்திரம் மூலம் தூர்வாரி வருகின்றனர்.

தொடர்ந்து விவசாயிகளும் புதர்களை அகற்றி தண்ணீர் கொண்டு செல்ல முயற்சி எடுத்து வரும் நிலையில் தற்பொழுது கொரோனா காலகட்டங்களில் பல்வேறு நிலையில் பாதிக்கப்பட்டு விவசாயிகளிடம் போதிய பணம் இல்லாததால் தொடர்ந்து பாசன வாய்க்காலை தூர்வாருவதற்கு பணமில்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

குளித்தலை பெரிய பாலம் அருகே உள்ள ஆற்று பாதுகாப்பு பொதுப்பணித்துறையினரிடம் பலமுறை விவசாயிகள் கோரிக்கை வைத்தும் இதுவரை கண்டுகொள்ளவில்லை. தற்பொழுது மழைக்காலம் தொடங்க உள்ள நிலையில், பாசன வாய்க்கால் தூர்வாரப்படாமல் இருந்தால் தண்ணீர் தேங்கி விவசாயிகள் பயிர்கள் பாதிக்கப்படும். எனவே, போர்க்கால அடிப்படையில் பொதுப்பணித்துறையினர் கடைமடை பாசன வாய்க்காலை தூர் வாரி தரவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைக்கின்றனர்.

விவசாயிகள் நலன் கருதி தமிழக அரசும் உடனடியாக நடவடிக்கை எடுத்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் எனவும் விவசாயிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil