கொரோனா தடுப்பு: கட்டுப்பாடுகளை மீறிய வணிக நிறுவனங்கள் மூடல்

கொரோனா தடுப்பு: கட்டுப்பாடுகளை மீறிய வணிக நிறுவனங்கள் மூடல்
X

கரூரில் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக முக்கிய வணிக பகுதியான ஜவஹர் பஜாரில் விதிமுறைக்கு புறமாக அதிக அளவில் வாடிக்கையாளர்கள் இருந்த கடைகள் எச்சரிக்கை விடுக்கப்பட்டு பூட்டப்பட்டன.

கொரோனா வைரஸ் அதிக அளவில் பரவி வருவதால் தமிழகம் முழுவதும் கூடுதல் கட்டுப்பாடுகள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளன. குறிப்பாக வணிக வளாகங்கள் கடைவீதிகளில் பெரிய அளவிலான மால்கள் வர்த்தக நிறுவனங்கள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் கரூர் மாவட்டத்தின் முக்கிய வணிக பகுதியான ஜவஹர் பஜாரில் இன்று பெரிய வர்த்தக நிறுவனங்கள், ஜவுளிக்கடைகள் நகை கடைகள் வழக்கம் போல திறந்திருந்தன. இங்கு அரசின் கட்டுப்பாடுகளுக்கு புறம்பாக அதிக அளவிலான வாடிக்கையாளர்கள் சமூக இடைவெளி இன்றி பொருட்களை வாங்குவதற்காக திரண்டிருந்தனர்.

இது குறித்து தகவலறிந்ந நகராட்சி அதிகாரிகள் கடைவீதிகளில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது கொரோனா பரவல் தடுப்பு விதிமுறைகளுக்கு புறம்பாக அதிக அளவில் வாடிக்கையாளர்கள் இருந்த கடைகளின் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்து உடனடியாக கடைகளை இழுத்து மூடினர். ஜவஹர் பஜாரில் மட்டும் சுமார் பத்துக்கும் அதிகமான பெரிய ஜவுளி நிறுவனங்கள் நகை கடைகள் இன்று மூடப்பட்டன.

இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் தெரிவிக்கையில், ஏற்கனவே தமிழக அரசு கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக பல்வேறு விதிமுறைகளை அறிவித்துள்ளது. இதன் அடிப்படையில் பெரிய வர்த்தக நிறுவனங்கள், மால்கள் மூட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. ஜவுளிக்கடைகள் நகைக்கடைகளில் அதிக அளவில் கூட்டம் சேர அனுமதிக்கக் கூடாது என்றும் பொருட்களை வாங்க வரும் வாடிக்கையாளர்களை சமூக இடைவெளியுடன் நிற்க வைத்து பொருட்களை விற்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இன்று ஜவஹர் பஜாரில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் அரசின் கட்டுப்பாடுகளை மதிக்காதது தெரியவந்தது. இதையடுத்து அந்த கடை உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு கடைகள் பூட்டப்பட்டன. தொடர்ந்து நகராட்சி அதிகாரிகள் பரவல் தடுப்பு விதிமுறைகளை மீறும் கடைகள் வர்த்தக நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தனர்.

Tags

Next Story