31 வருட போராட்டம் 3 நாளில் தீர்வு : ஆட்சியரின் அதிரடி

பேருந்து சேவை கோரி 30 ஆண்டு காலம் போராடிய மக்களுக்கு மூன்றே நாட்களில் தீர்வு கண்டு பேருந்து வசதியை ஏற்படுத்திக் கொடுத்த மாவட்ட ஆட்சியர்.

கரூர் மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்டது கருப்பம்பாளையம் ஊராட்சி. விசாயத்தையே நம்பி உள்ள இந்த ஊராட்சியில் வசிக்கும் மக்கள், அவசரத் தேவைகளுக்கும், அத்தியாவசிய பணிகளுக்கும் சுமார் 8 கிலோமீட்டர் தொலைவில் கரூர் நகருக்கு வந்து செல்ல வேண்டிய சூழல் உள்ளது.

இந்நிலையில், கரூர் மாவட்ட ஆட்சியர் கடந்த 15 ம் தேதி தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்டப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது, கருப்பம்பாளையம் ஊராட்சி மக்கள் தங்களின் அத்தியாவசியத் தேவைகளுக்கு கரூர் நகருக்கு சென்று வர பேருந்து வசதி இல்லை என்றும், இப்பகுதி விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் பொருட்களை கரூருக்கு கொண்டு சென்று விற்பனை செய்வதற்கு கூட வசதி இல்லாததால், ஆயத்த ஆடை உற்பத்தி தொழிற்சாலைகள், கொசுவலை உற்பத்தி தொழிற்சாலைகளுக்கு தினந்தோறும் பணிக்குச் சென்று வருவதாகவும் கடந்த 31 ஆண்டுகளாக கோரிக்கை வைத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என்று மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்தனர்.

பொதுமக்களின் கோரிக்கையை கேட்ட மாவட்ட ஆட்சியர் வெகுவிரைவில் கருப்பம்பாளையம் பகுதிக்கு பேருந்து வசதி செய்தி தரப்படும் என்று உறுதியளித்தார். தொடர்ந்து போக்குவரத்துக்கழக பொது மேலாளரிடம் கருப்பம்பாளையம் ஊராட்சிக்கு நகரப்பேருந்து சென்று வருவதற்கான உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். இதையடுத்து, போக்குவரத்து துறை அலுவலர்கள் கருப்பம்பாளையத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு பேருந்து வசதி ஏற்படுத்துவது குறித்து ஆய்வு செய்தனர்.

பின்னர், தினந்தோறும் காலை 9.25 மணிக்கு அப்பிப்பாளைம் முதல் கரூர் வரை உள்ள பேருந்து சேவையை கருப்பம்பாளையம் வரை இயக்கவும், மாலை 6.20 மணிக்கு கரூர் முதல் கருப்பம்பாளையம் வரை என ஒரு நாளைக்கு இரண்டு முறை கருப்பம்பாளையத்திற்கு வரும் வகையில் நகரப்பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதையடுத்து, கடந்த 19 ம் தேதி முதல் கருப்பம்பாளையம் வரை பேருந்து சேவை தொடங்கப்பட்டது. இந்த பேருந்து சேவையை மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் நேரில் பார்வையிட்டு பேருந்து சேவையினை துவக்கி வைத்தார்.

30 ஆண்டுகளாக கோரிக்கை வைத்து ஓய்ந்துபோன பொதுமக்கள், மூன்றே நாட்களில் நடவடிக்கை எடுத்து பேருந்து வசதி செய்து கொடுத்த கரூர் மாவட்ட ஆட்சியருக்கு பொதுமக்கள் நெகிழ்ச்சியுடன் நன்றிகளை தெரிவித்துக்கொண்டனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!