பள்ளி மாணவி தற்கொலை வழக்கு: சிபிசிஐடி விசாரிக்க கோரிக்கை
பைல் படம்.
கரூர் வெண்ணைமலை பகுதியில் கரூர்-சேலம் நெடுஞ்சாலையில் உள்ள தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி ஒருவர் பாலியல் கொடுமையால் உயிர் இழக்கும் கடைசி பெண்ணாக நான் இருக்க வேண்டும் என கடந்த 19ஆம் தேதி கடிதம் எழுதி வைத்து விட்டு அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.
மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரம் தமிழகம் முழுதும் பரபரப்பை ஏற்படுத்தியது. கரூர் மாவட்ட வெங்கமேடு காவல் நிலைய போலீசார் இந்த வழக்கை சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், கரூர் மாவட்ட காவல்துறை சார்பில் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு பல்வேறு கோணங்களில் விசாரணை முடுக்கி விடப்பட்டது. குறிப்பாக மாணவி பயன்படுத்திய செல்போனை சைபர் கிரைம் போலீசார் தீவிர சோதனைக்கு உட்படுத்தி அந்தப் பெண்ணுக்கு பாலியல் ரீதியாக தொல்லை யாரும் அளித்தனர் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
அதுமட்டுமில்லாமல் மாணவியின் சமூக வலைதள கணக்குகளும் தீவிரமாக ஆராயப்பட்டது. அதில் மாணவிக்கு யாரும் பாலியல் ரீதியாக தொல்லை அளிக்கப்படவில்லை என போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது. இருந்தாலும் இந்த வழக்கு தொடர்ந்து விசாரணை செய்து வந்த நிலையில், மாணவி தற்கொலை தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.
இந்நிலையில், இன்று உயிரிழந்த மாணவியின் தாயார் மற்றும் சமூக ஆர்வலர்கள் சிலர் சேர்ந்து மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கரை சந்தித்தனர். அப்போது மாணவியின் தாயார் எழுத்து பூர்வமாக மாணவியின் தற்கொலை வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu