கரூரில் தடுப்புச் சுவரில் மோதிய பேருந்து! பொதுமக்கள் திடீர் அதிர்ச்சி!
கரூர் நகருக்கு வந்த அரசுப் பேருந்து அதிகாலையில் சாலையின் நடுவே வைக்கப்பட்டிருந்த தடுப்புச் சுவரில் எதிர்பாராத விதமாக மோதியது. இதனால் அந்த பகுதியில் திடீரென பரபரப்பு ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக பயணிகள் காயமடையவில்லை.
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கன்னியிலிருந்து ஈரோட்டுக்கு செல்லும் அரசுப் பேருந்து கரூர் வழியாக சென்று கொண்டிருந்த நேரத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. திருச்சி - கரூர் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள காந்திகிராமம் பகுதிக்கு உட்பட்ட ராம் நகர் அருகில் பேருந்து வந்து கொண்டிருந்தது. சாலையில் சரியாக வெளிச்சம் இல்லாதபோதும் ஓட்டுநர் பேருந்தின் விளக்கை பயன்படுத்தி சாதுர்யமாக ஓட்டி வந்துள்ளார். அந்த நேரத்தில், ஓட்டுநரே எதிர்பாராத சமயம் சாலையின் நடுவே வைக்கப்பட்டிருந்த தடுப்புச் சுவரில் மோதி பேருந்து நின்றது.
பேருந்துக்குள் இருந்த பயணிகள் பயங்கர சத்ததத்தைக் கேட்டு என்ன நடந்தது என்று அச்சம் கொண்டனர். உடனடியாக அவர்களை சமாதானப்படுத்திய நடத்துனர், பின் சேதத்தைப் பார்வையிட்டார். ஓட்டுநரும் சக பயணிகளும் பேருந்துக்கு வெளியே இறங்கி பார்த்தனர்.
முன்பக்க சக்கரம் தடுப்புச் சுவரின் மீது பலமாக மோதி நின்றது. பயங்கரமான சேதம் அடைந்திருந்ததால் பேருந்து இயக்க முடியாத நிலை ஏற்பட்டது. இந்த பேருந்தை பவானியை சார்ந்த சந்திரமோகன் ஓட்டிக் கொண்டு வந்திருந்தார்.
சாலையின் தடுப்புச் சுவரில் மோதிய நிலையிலும் அதிர்ஷ்டவசமாக பேருந்தில் அமர்ந்திருந்த பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்த விபத்து தொடர்பாக தாந்தோன்றிமலை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பொதுவாக இரவு நேரங்களில் சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு வழிகாட்ட ரிப்ளைக்டர் எனும் ஸ்டிக்கர் ஒட்டி சாலையில் இருக்கும் தடுப்புச் சுவர்கள், அறிவிப்புகளை வைத்திருப்பார்கள். ஆனால் இந்த பகுதியில் சாலையின் நடுவே வைக்கப்பட்டிருந்த தடுப்புச் சுவரில் ரிப்ளைக்டர் ஸ்டிக்கர் ஏதும் ஒட்டப்படவில்லை என்கிறார்கள். இதுதான் இது போன்ற விபத்துகள் இரவு நேரங்களில் ஏற்பட காரணமாக அமைகின்றன என ஓட்டுநனர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu