அதிமுக கட்சி அலுவலகத்தில் அத்துமீறி உள்ளே நுழைந்த பறக்கும் படை

அதிமுக கட்சி அலுவலகத்தில் அத்துமீறி உள்ளே நுழைந்த பறக்கும் படை

அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அதிமுகவினர்.

கரூர் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் அத்துமீறி உள்ளே நுழைந்த தேர்தல் அதிகாரிகளால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழகத்தில் நாளை நகரமைப்பு உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. அதிமுக, திமுக, பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தீவிர பிரச்சாரம் நேற்று மாலையுடன் முடிவடைந்தது.

இந்நிலையில், கரூரில் திமுகவினர் கரூர் மாநகராட்சி தேர்தலில் போட்டியிடுவதற்காக வாக்காளர்களுக்கு ரூ.2000 பட்டுவாடா செய்து வந்த நிலையில், இதை தமிழக தேர்தல் ஆணையத்திற்கு, அதிமுக நிர்வாகிகள் மற்றும் அதிமுக வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் என்று பலர் புகார் தெரிவித்தனர்.

கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளரும், தமிழக மின்சாரத் துறை அமைச்சருமான செந்தில் பாலாஜி கோவையில் முகாமிட்டுள்ள நிலையில், தனது சொந்த மாவட்டத்தை எக்காரணம் முன்னிட்டும், கோட்டை விடக்கூடாது என அரசு அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் ஒத்துழைப்போடு அவர்களையும் திமுகவிற்கு வாக்கு சேகரிக்குமாறு, ரகசிய கட்டளையிட்டதாக அதிமுக நிர்வாகிகள் கூறி வந்தனர்.

ஆனால், இன்று திடீரென்று கேபிள் வட்டாட்சியர் மற்றும் தேர்தல் பறக்கும் படை அதிகாரியுமான சதாசிவம் தலைமையில் தேர்தல் பறக்கும் படை அதிமுக அலுவலகத்தில் தீவிர சோதனை நடத்தியுள்ளனர்.

அப்போது கட்சி அலுவலகத்திற்கு வந்த மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்த பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும்ஷபோது, கரூர் காவல் நிலைய ஆய்வாளர் செந்தூர் பாண்டியன் மற்றும் இருபதுக்கும் மேற்பட்ட போலீசாரை அதிமுக கட்சி அலுவலகத்திற்கு உள்ளே நுழைய முற்பட்டனர்.

இதனால் ஆத்திரமடைந்த அதிமுகவினர் காவல்துறையினர் வெளியேறு எனக்கூறி கோஷமிட்டனர். பின்னர் நாங்கள் முறைப்படி அனைத்தும் திறந்து காட்டி விட்டோம் என எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையிலான அதிமுகவினர் கூறினர்.

இதனையடுத்து போலீசார் மற்றும் தேர்தல் அதிகாரிகள் வெறுங்கையுடன் திரும்பிச் சென்றனர். இந்த சம்பவத்தால் கரூர் மாவட்ட அதிமுக அலுவலகம் மட்டுமல்லாது, தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த அதிமுகவினர் இடம் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. மேலும், அதிமுக கட்சி அலுவலகத்தில் மட்டும் இந்த சோதனை தவிர மற்ற கட்சிகளின் அலுவலகத்தில் சோதனை இல்லை என்கின்றனர் சமூக நல ஆர்வலர்கள்.

Tags

Read MoreRead Less
Next Story