படித்த இளைஞர்கள் உதவி தொகை பெற விண்ணப்பிக்கலாம்: ஆட்சியர் தகவல்

படித்த இளைஞர்கள்  உதவி தொகை பெற விண்ணப்பிக்கலாம்: ஆட்சியர் தகவல்
X
10 , 12 -ஆம் வகுப்பு மற்றும் கல்லூரி வரை படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு அரசு உதவித்தொகை வழங்கப்படுகிறது

கரூர் மாவட்டத்தில் படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து இவர் வெளியிட்டுள்ள தகவல்: மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து எவ்வித வேலைவாய்ப்பும் கிடைக்காமல் 5 ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருப்பவர்களுக்கு மாதம் ஒன்றுக்கு 10 ம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு ரூ .200, 10 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ .300, மேல்நிலைக் கல்வியில் தேர்ச்சிப் பெற்றவர்களுக்கு ரூ.400, மற்றும் பட்டதாரிகளுக்கு ரூ.600, வீதம் மூன்றாண்டு காலத்திற்கு வழங்கப்படுகிறது.

மேலும் அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் தொகை மாதம் ஒன்றுக்கு 10 ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தேர்ச்சி பெறாதவர்களுக்கு ரூ.600, மேல்நிலைக் கல்வியில் தேர்ச்சிப் பெற்றவர்களுக்கு ரூ.750, மற்றும் பட்டதாரிகளுக்கு ரூ.1000, வீதம் பத்தாண்டு காலத்திற்கு வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தின் கீழ் பயன்பெற மேற்கண்ட கல்வித் தகுதிகளை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து 30.09.2021 உடன் 5 ஆண்டு காலம் முடிவுற்ற பதிவுதாரர்களும் , மேலும் அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகளும் பதிவு செய்து ஒரு வருடம் முடிவுற்ற பதிவுதாரர்கள் தகுதியானவர்கள். ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் 45 வயதுக்கு மிகாமலும், இதர வகுப்பினர் 40 வயதுக்கு மிகாமலும் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000 -க்கும் மிகாமலும் இருத்தல் வேண்டும்.

மாற்றுத்திறனாளிகளுக்கு வருமான வரம்பு இல்லை . மேலும் மனுதாரர் உதவித் தொகை பெறும் காலங்களில் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவினைத் தொடர்ந்து புதுப்பித்து வருபவராக இருத்தல் வேண்டும்.மேற்கண்ட தகுதியுடையவர்கள் உடனடியாக மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு அனைத்து அசல் கல்விச்சான்றிதழ்கள் மற்றும் வேலைவாய்ப்பு அடையாள அட்டை ஆகியவற்றுடன் நேரில் சென்று விண்ணப்பித்து பயன் பெறலாம்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!