/* */

கரூர்: வருமான வரித்துறை அதிகாரிகளை தடுத்த நபர்கள் மீது வழக்கு பதிவு

கரூரில் அரசு வருமான வரித்துறை அதிகாரிகளை தடுத்தவர்கள் மீது அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

கரூர்: வருமான வரித்துறை அதிகாரிகளை தடுத்த நபர்கள் மீது வழக்கு பதிவு
X

கரூரில் வருமான வரித்துறை அதிகாரிகளை தடுத்து நிறுத்திய திமுகவினர்

தமிழ்நாடு முழுவதும் அரசு ஒப்பந்ததாரர்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். டாஸ்மாக் மற்றும் மின்துறை ஒப்பந்ததாரர்கள் வீடுகளிலும் வருமான வரித்துறை சோதனை நடத்தினர்.

இதற்கிடையில், கரூரில் ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் நேற்று வருமான வரி சோதனை நடைபெற்ற இடத்தில் சோதனையில் ஈடுபட்ட அதிகாரிகளை திமுக தொண்டர்கள் முற்றுகையிட்டு கோஷங்களை எழுப்பினர். மேலும் அதிகாரிகளின் கார் கண்ணாடியை உடைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதில் திமுக தொண்டர்களில் ஒருவரை வருமான வரித்துறை அதிகாரிகள் தாக்கியதாக கூறப்படுகிறது. எதிர்ப்பு காரணமாக அதிகாரிகள் அப்பகுதியில் இருந்து புறப்பட்டனர். பாதுகாப்பு கருதி வருமானவரித்துறை அதிகாரிகள் கரூர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இந்த நிலையில், கரூரில் நேற்று சோதனை நடத்த வந்த வருமான வரித்துறை அதிகாரிகளை தடுத்த நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை தெரிவித்துள்ளது.

அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அடையாளம் தெரியாத நபர்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளதாக கரூர் மாவட்ட காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.

அதே போல் திமுகவினரை தாக்கிய அதிகாரிகள் மீது திமுகவினர் கொடுத்த புகாரின் பேரில் வருமான வரித்துறையினர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Updated On: 28 May 2023 3:09 AM GMT

Related News