சாலை பணிகள் தரமில்லாமல் இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் கலெக்டர்

சாலை பணிகள் தரமில்லாமல்  இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் கலெக்டர்
X

சாலை சீரமைப்பு பணிகளை ஆய்வு மேற்கொண்ட கலெக்டர் பிரபுசங்கர்

தேசிய நெடுஞ்சாலைத்துறை மூலம் நடைபெறும் சாலை பராமரிப்பு பணிகள் தரமில்லாமல் இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்

கரூர் மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் திருச்சி-கரூர் மற்றும் மதுரை-சேலம் புறவழிச்சாலைகளில் சுக்காலியூர், திருக்காம்புலியூர், வெங்கக்கல்பட்டி, மணவாசி மற்றும் குளித்தலை பகுதிகளில் தேசிய நெடுஞ்சாலை துறையில் மூலமாக சாலைகள் பராமரிக்கும் பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கரூர் மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகள் துறையின் பராமரிப்பில் திருச்சி-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் மணவாசி பகுதியில் ஒரு சுங்கச்சாவடியும், திண்டுக்கல்-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் வேலன் செட்டியூர் பகுதியில் ஒரு சுங்கச்சாவடியும் அமைந்துள்ளது. இந்த சுங்கச்சாவடிகளில் வாகன ஓட்டிகளிடம் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகின்றது. ஆனால் அப்பகுதியில் உள்ள சாலைகள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை என்றும், இதனால் அப்பகுதிகளில் அதிக அளவிலான விபத்துக்கள் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது என்றும் புகார்கள் வந்தன.

பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் மாவட்ட அளவில் நடைபெற்ற சாலை பாதுகாப்புக்குழு கூட்டங்களில் பலமுறை எடுத்துரைக்கப்பட்டும் உரிய நடவடிக்கை இல்லாததால், மாவட்ட சாலை பாதுகாப்புக்குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு, குழுவின் தலைவரும் மாவட்ட கலெக்டருமான பிரபுசங்கர் தேசிய நெடுஞ்சாலையின் திட்ட மேலாளருக்கு விளக்கம் கோரி கடிதம் அனுப்பினார்.

அதனைத்தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை பராமரிப்பு பணிகள் குறித்து கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் தெரிவித்ததாவது:-

கரூர் மாவட்டத்தில் சாலை விபத்துகளை தடுக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டதில், கரூர் மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலை எண்-7ல் அதிகளவிலான விபத்துகள் நடைபெறுவது கண்டறியப்பட்டது. அதனடிப்படையில், தேசிய நெடுஞ்சாலையினை பராமரிக்கும் நிறுவனத்திடம் பொதுமக்களிடம் சுங்கவரி வசூல் செய்தும் சாலைகளை முறையாக பராமரிக்காத காரணத்தால் ஏன் உங்களது சுங்கவரி வசூலிக்கும் உரிமையினை ரத்து செய்யக் கூடாது என்று விளக்கம் கேட்டிருந்தோம். அந்த கடிதத்திற்கு அளித்துள்ள பதிலில் பல்வேறு சீரமைப்பு பணிகளை தொடங்கியுள்ளதாக தெரிவித்திருந்தார்கள்.

அதனடிப்படையில் , மாவட்ட சாலை பாதுகாப்புக்குழுவால் பரிந்துரைக்கப்பட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்து விரிவாக ஆய்வு செய்யப்படும். இந்நிறுவனத்தால் எடுக்கப்பட்டுள்ள சீரமைப்பு நடவடிக்கைகள் திருப்தியளிக்கும்பட்சத்தில் இவர்களுக்கு வழங்கப்பட்ட நோட்டீஸ் திரும்ப பெறப்படும். மாறாக பணிகள் தரமில்லாமலோ, குறைபாடுகளோ இருந்தால் மேல் நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்ட சாலை பாதுகாப்புக்குழுவின் தலைவர் என்ற அடிப்படையில் இன்று நடைபெறும் கூட்டத்தில் இதுகுறித்து விவாதிக்கப்படும். இப்பணிகள் குறித்த தொழில்நுட்ப ரீதியான அறிக்கையும் கோரப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து திருச்சி-கரூர் புறவழிச் சாலையில் தேசிய நெடுஞ்சாலை துறை மூலமாக சாலை பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதையும், அப்பணிகள் தரம் குறித்தும், சாலை ஓரங்களில் வெள்ளை வண்ணம் பூசும் பணி நடைபெற்று வருவதையும், உயர்கோபுர மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளதையும், சாலை ஓரப்பகுதியில் மண் அணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதையும் கலெக்டர் பார்வையிட்டார்.

ஆய்வின்போது தேசிய நெடுஞ்சாலை மேலாளர் முருகபிரகாஷ் (திண்டுக்கல்), உதவி கோட்ட பொறியாளர் (நெடுஞ்சாலை, கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) தமிழ்ச்செல்வன் (கிருஷ்ணராயபுரம்), அரசு அலுவலர்கள் உள்பட பலர் உடனிருந்தனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்