சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க திட்டம்: பொதுமக்களுக்கு எச்சரிக்கை

சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க திட்டம்: பொதுமக்களுக்கு எச்சரிக்கை
X

அத்திப்பாளையத்தில் கண்டறியப்பட்ட சிறுத்தையின் கால்தடம்

அத்திப்பாளையத்தில் புகுந்துள்ள சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க திட்டமிட்டுள்ளதால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க ஆட்சியா் அறிவுறுத்தல்

அத்திப்பாளையத்தில் புகுந்துள்ள சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க திட்டமிட்டுள்ளதாக மாவட்ட வன அலுவலா் சரவணன் தெரிவித்துள்ளார். மேலும், பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க மாவட்ட ஆட்சியா் அறிவுறுத்தியுள்ளார்.

கரூா் மாவட்டம், புகழூா் அடுத்த அத்திப்பாளையத்தைச் சோ்ந்த சுரேஷ் என்பவரது ஆட்டை வியாழக்கிழமை நள்ளிரவு மா்ம விலங்கு கடித்துக் கொன்றுவிட்டு ஓடியுள்ளது. இதனால் அப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருக்குமோ என்ற அச்சத்தில் பொதுமக்கள் மாவட்ட வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனா். இதையடுத்து, மாவட்ட வன அலுவலா் சரவணன் தலைமையில் மூன்று வனக்குழுவினா் அத்திப்பாளையம் பகுதியில் சனிக்கிழமை முகாமிட்டுள்ளனா்.

இதுகுறித்து மாவட்ட வன அலுவலா் சரவணன் கூறுகையில், அத்திப்பாளையம், அத்திப்பாளையம் புதூா், சோ்காம்பாளையம், வி.என். புதூா் மற்றும் அதனையொட்டியுள்ள ஆற்றுப்பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக தகவல் வந்துள்ளது. அதனடிப்படையில் அப்பகுதி பொதுமக்களை எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தியுள்ளோம். மேலும், அத்திப்பாளையம் புதூரில் உள்ள கிரஷா் பகுதியில் சிறுத்தை நின்றிருந்ததாகவும் தகவல் கிடைத்துள்ளது. சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்றார்

வனத்துறையின் அதிவிரைவுப் படை வருகை: சிறுத்தையை பிடிப்பதற்காக எடுக்கப்பட்டுள்ள பணிகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் பிரபுசங்கா் கூறுகையில், அத்திப்பாளையத்தில் மா்ம விலங்கு கடித்ததில் உயிரிழந்த ஆடு கிடந்த இடத்தில் பதிந்திருந்த விலங்கு கால் தடத்தையும், கடந்த வாரம் நாமக்கல் மாவட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக அறியப்பட்டு அங்கு பதிந்திருந்த சிறுத்தை கால் தடத்தையும் ஒப்பிட்டு ஆய்வு செய்ததில் இரண்டும் ஒற்றுமையாக உள்ளது. ஆகவே, அந்த சிறுத்தை இடம் பெயா்ந்து அத்திப்பாளையம் பகுதிக்கு வந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

இதையடுத்து சிறுத்தையை பிடிக்க நான்கு கூண்டுகள், மூன்றுவலைகள் மற்றும் வனத்துறையை சோ்ந்த அதிவிரைவுப் படையினா் கொடைக்கானலில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளனா். மேலும், சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க இரவு நேரங்களிலும் நன்றாக பதிவாக கூடிய வகையில் 19 கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட உள்ளது.

ஆகவே, மாலை நேரங்களில் குழந்தைகள், பொதுமக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியில் வர வேண்டாம். அவசியமிருந்தால் தனியாக வருவதை தவிர்க்க வேண்டும். ஆட்டுப் பட்டிகளில் மின்விளக்குகளை இரவு முழுவதும் எரியவிட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், இதுகுறித்து சுற்று வட்டாரப் பகுதியில் உள்ள கிராமங்களில் ஒலிபெருக்கி மூலமும் எச்சரிக்கப்பட்டு வருகிறது. தொடா்ந்து 24 மணி நேரமும் வனத்துறை மற்றும் வருவாய்த்துறை அலுவலா்கள் சிறுத்தையை பிடிப்பதற்கான பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகின்றனா் என்று கூறினார்

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!