அரியலுார், நீலகிரிக்கு நீர் நிலைகளை பாதுகாப்புக்கான ராம்சார் அங்கீகாரம்

அரியலுார், நீலகிரிக்கு நீர் நிலைகளை பாதுகாப்புக்கான ராம்சார் அங்கீகாரம்
X
அரியலுார் மாவட்டம் கரைவெட்டி பறவைகள் சரணாலயம், நீலகிரி மாவட்டம் லாங்வுட் சோலை காடுகள் ஆகிய இடங்கள் சர்வதேச 'ராம்சார்' பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.

நீர் நிலைகளை பாதுகாப்பதற்காக, 1971ல் ஈரான் நாட்டில் ராம்சார் நகரில், சர்வதேச ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதன்படி, சதுப்பு நிலங்கள், நீர் நிலைகள், அலையாத்தி காடுகள் சர்வதேச அளவில் பட்டியலிடப்படுகின்றன.

ராம்சார் பட்டியலில் இடம் பெறும் இடங்கள் சர்வதேச அளவில் கவனத்தை பெறுகின்றன. ஆண்டு தோறும் பிப்., 2 சர்வதேச ஈர நிலங்கள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

உலக ஈரநில தினத்தையொட்டி, தமிழகத்தில் இரு தளங்கள் உள்ளிட்ட ஐந்து இடங்கள் ராம்சார் பட்டியலில் சேர்க்கப்படுகிறது. இதன்மூலம் நாட்டில் ராம்சார் தளங்களின் எண்ணிக்கை 80 ஆக உயர்கிறது என்று மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ் கூறியுள்ளார்.

சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த ஈரநிலங்கள் ராம்சார் தளங்கள் என்று அழைக்கப்படுகின்றன. ராம்சார் தள கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் டாக்டர் முசோண்டா மும்பாவை தாம் சந்தித்து பேசியதாகவும், அவரிடம் ஐந்து தளங்கள் ராம்சார் தளங்களாக அறிவிக்கப்பட்டதற்கான சான்றிதழ்களை ஒப்படைத்ததாகவும் பூபேந்தர் யாதவ் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தமிழக வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை கூடுதல் தலைமை செயலர் சுப்ரியா சாஹூ வெளியிட்ட அறிக்கையில்

தமிழகத்தில் இதுவரை, 14 இடங்கள் ராம்சார் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. அதில் இந்த ஆண்டுக்கான கணக்கில் கூடுதலாக, இரண்டு இடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

அரியலுார் மாவட்டத்தில், 1,121 ஏக்கர் பரப்பளவில் உள்ள கரைவெட்டி பறவைகள் சரணாலயம் ராம்சார் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. சதுப்பு நிலமாக உள்ள இப்பகுதி கிராம மக்களால் பாதுகாக்கப்படும் நிலையில் இங்கு, 198 வகையான பறவைகள் வந்து செல்கின்றன. நீலகிரி மாவட்டத்தில், 286 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள லாங்வுட் சோலை காடுகள், ராம்சார் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. வெப்ப மண்டல மழைக்காடாக வகைபடுத்தப்பட்டுள்ள இப்பகுதிக்கு, 14 வகையான பறவைகள் வந்து செல்கின்றன.

இவற்றுடன் சேர்த்து தமிழகத்தில் ராம்சார் பட்டியலில் சேர்க்கப்பட்ட இடங்களின் எண்ணிக்கை, 16ஆக அதிகரித்துள்ளது. இதனால், ராம்சார் பட்டியலில் இடம் பெற்ற பகுதிகள் அதிகம் உள்ள முதல் மாநிலம் என்ற பெருமையை தமிழகம் பெற்றுஉள்ளது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 2022-ல், சுதந்திரத்தின் 75-வது ஆண்டில் மொத்த ராம்சார் தளங்களின் எண்ணிக்கையை 75-ஆக உயர்த்துவதில் இந்தியா ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளது. மத்திய அரசின் குறிப்பிடத்தக்க செயல்பாடுகளின் காரணமாக, கடந்த பத்து ஆண்டுகளில் ராம்சார் தளங்களின் எண்ணிக்கை 26 முதல் 80 ஆக அதிகரித்துள்ளது. அவற்றில் 38 இடங்கள் கடந்த மூன்று ஆண்டுகளில் சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story