முகத்துவாரத்தில் கவிழ்ந்த படகு - உயிர் தப்பிய மீனவர்கள்.

முகத்துவாரத்தில் கவிழ்ந்த படகு - உயிர் தப்பிய மீனவர்கள்.
X

அலைகளுடன் ஆர்ப்பரிக்கும் கன்னியாகுமரி முகத்துவாரம்.

துறைமுக முகத்துவாரத்தில் மோதி படகு கவிழ்ந்ததில் படகில் இருந்த மீனவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டிணம் மீன்பிடி துறைமுக பகுதியில் கடந்த ஒரு வருடத்திற்கு முன் ஏற்பட்ட கடற்சீற்றத்தின் போது இரையுமன்துறை பகுதியில் உள்ள முகத்துவாரம் இடிந்து சேதம் அடைந்தது. துறைமுக முகத்துவாரம் பகுதியில் மணல் மேடுகள் அமைந்ததின் காரணமாக பல படகுகள் அந்த பகுதியில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் இதுவரை 5 க்கும் மேற்பட்ட மீனவர்கள் பலியாகி உள்ளனர். இதனை தொடர்ந்து மீனவர்கள் முகத்துவாரப்பகுதியில் குவிந்து கிடக்கும் மணலை மாற்றி முகத்துவாரத்தை சரி செய்ய தொடர் போராட்டங்கள் நடத்தியதின் பேரில் மணலை அகற்றும் பணியை செய்தனர். சேதமடைந்த இரையுமன்துறை முகத்துவார பகுதியை சீரமைத்து துறைமுகத்தை மறுசீரமைப்பு செய்ய 77 கோடி ருபாய் நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டது. இந்த பணம் ஒதுக்கபட்டு மாதங்கள் பல கடந்த பின்னரும் துறைமுக முகத்துவாரத்தை சீரமைக்கும் பணி இதுவரை தொடங்கப்படவில்லை.

இதனால் துறைமுக முகத்துவாரப்பகுதியில் சில நாட்களாக மீண்டும் பைபர் படகுகள் கவிழ்ந்து விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. இந்நிலையில் கடலுக்கு பைபர் படகில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் இன்று கரை திரும்பி வரும் போது முகத்துவாரப்பகுதியில் ராட்சத அலை ஒன்றில் சிக்கி பைபர் படகு கடலுக்குள் கவிழ்ந்தது. இதில் படகில் இருந்த மீனவர்கள் அனைவரும் கடலில் தூக்கி வீசப்பட்டனர், இந்த விபத்தில் அனைவரும் அதிர்ஷ்ட்டவசமாக உயிர் சேதம் ஏதும் ஏற்படாமல் நீந்தி கரை சேர்ந்தனர், மேலும் படகில் இருந்த மீன்பிடி உபகரணங்கள் அனைத்தும் கடலுக்குள் மூழ்கின. தொடர்ந்து இதுபோன்ற விபத்துகள் ஏற்பட்டு வருவதை தடுக்க உடனடியாக ஆபத்தான வடிவமைப்பில் அமைக்கப்பட்டு இருக்கும் துறைமுகத்தை மறுசீரமைப்பு செய்து பாதுகாப்பான துறைமுகமாக கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!