அடுத்தவர் பைக்கை ஆட்டைய போட்ட வாலிபர், சிறையில் தள்ளிய காவல்துறை
அடுத்தவர் பைக்கை திருடியதால் சிறையில் அடைக்கப்பட்ட வாலிபர்
குமரி மாவட்டம் புத்தளம் அருகே உள்ள தங்கநாடார் நகரை சேர்ந்தவர் ரிஷி (வயது21). கோழிக்கடையில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று இரவு தனக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளை தங்கநாடார் நகரில் உள்ள ஒரு வெல்டிங் கடையின் அருகில் நிறுத்தி உள்ளார். மறுநாள் காலையில் பார்த்தபோது அங்கு நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிளை காணவில்லை.
இதுகுறித்து ரிஷி சுசீந்திரம் காவல்நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் காவல் உதவி ஆய்வாளர் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தார். அதில் நள்ளிரவில் ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் ரிஷியின் மோட்டார் சைக்கிளை திருடிச் செல்வது பதிவாகி இருந்தது. அந்த காட்சிகளை காவல்துறையினர் கைப்பற்றி மர்ம நபர்களை தேடி வந்தனர்.
இந்தநிலையில் சுசீந்திரம் காவல்துறையினர் ஆண்டார்குளம் பேருந்து நிறுத்தம் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, மோட்டார் சைக்கிள் திருட்டு சம்பவத்தில் தொடர்புடைய 2 பேர் வருவதை காவல்துறையினர் கண்டனர். உடனே அவர்களை மடக்கிப்பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் கேரள மாநிலம் நெய்யாற்றின்கரை கொடங்காவிளா அருகே உள்ள தவளக்குளம் பகுதியை சேர்ந்த நிதின் (19), நெய்யாற்றின்கரை தனோசரம் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவன் என்பதும், தங்கநாடார் நகரில் திருட்டுபோன ரிஷியின் மோட்டார் சைக்கிளை திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து காவல்துறையினர் அவர்கள் 2 பேரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையில், நிதின் தனக்கு மோட்டார் சைக்கிள் வாங்குவதற்காக தனது நண்பர்களான 16 வயது சிறுவன் உள்பட 4 பேருடன் ஒரே மோட்டார் சைக்கிளில் குமரி மாவட்டத்துக்கு வந்துள்ளார். பல பழைய மோட்டார் சைக்கிள் விற்பனை செய்யும் கடைகளில் ஏறி இறங்கினர். ஆனால் நிதினுக்கு பிடித்தமான மோட்டார் சைக்கிள் கிடைக்கவில்லை.
இந்தநிலையில் அவர்கள் நள்ளிரவில் தங்கநாடார் நகர் பகுதிக்கு வந்தனர். அப்போது ரிஷியின் மோட்டார் சைக்கிள் சாலையோரம் நிற்பதை பார்த்ததும் நிதினுக்கு பிடித்து விட்டது. உடனே நிதின் நண்பர்களுடன் சேர்ந்து அந்த மோட்டார் சைக்கிளை திருடிச் சென்று பதிவெண் பிளேட்டை மாற்றி ஓட்டி வந்தது விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து காவல்துறையினர் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்து, அவர்கள் 2 பேரையும் கைது செய்து நாகர்கோவில் மாஜிஸ்திரேட்டிடம் ஆஜர் படுத்தினர். மோட்டார் சைக்கிளை திருடிய நிதினை ஜெயிலில் அடைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். மற்றொருவர்16 வயது சிறுவன் என்பதால் அவரை ஜாமீனில் விட உத்தரவிட்டார். இதையடுத்து நிதினை காவல்துறையினர் சிறையில் அடைத்தனர். மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் இருவரை காவல்துறையினர் தேடி வருகிறார்கள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu