குமரி: மன்னர் உடல்வாள் முன்செல்ல சுவாமி சிலைகள் புறப்பாடு
திருவனந்தபுரத்தில் நவராத்திரி விழாவிற்காக, குமரியில் இருந்து சுவாமி சிலைகள் புறப்பட்டன.
திருவனந்தபுரத்தில் நடைபெறும் நவராத்திரி விழாவில் கலந்து கொள்வதற்காக, குமரி மாவட்டத்தில் இருந்து சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன், வேளிமலை முருகன் மற்றும் பத்மநாபபுரம் தேவார கட்டு சரஸ்வதி அம்மன் ஆகிய சாமி சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்வது மரபு.
இந்த ஆண்டுக்கான நவராத்திரி விழா, வரும் 6-ந் தேதி துவங்குகிறது, நவராத்திரி விழாவிற்கு குமரியில் இருந்து சாமி சிலைகள் இன்று காலை பத்மநாபபுரம் அரண்மனையில் இருந்து புறப்பட்டு சென்றன. முன்னதாக பத்பநாபாபுரம் அரண்மனை உப்பரிகை மாளிகையில் பாதுகாக்கப்படும் மன்னர் உடைவாள் மாற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அதன்படி, பத்மநாபபுரம் அரண்மனையில் உள்ள உப்பரிகை மாளிகை மேல்மாடியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள மன்னர் மார்த்தாண்ட வர்மாவின் உடைவாளை, கேரள அறநிலையத்துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன், கல்வித்துறை அமைச்சர் சிவன் குட்டி, தொல்லியல் துறை அமைச்சர் அகமது தேவர் கோவில், மத்திய அமைச்சர் முரளிதரன், ஆகியோர் முன்னிலையில், குமரி மாவட்ட திருக்கோவில்களின் இணை ஆணையர் ஞானசேகரிடம் ஒப்படைக்கப்பட்டது.
கொரோனா காரணத்தால், கேரளா போலீசார் மரியாதை செலுத்த அரசு அனுமதிக்காத நிலையில், தமிழக போலீசாரின் துப்பாக்கி ஏந்திய மரியாதை செலுத்தப்பட்டது. அதை தொடர்ந்து, சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன், வேளிமலை முருகன், தேவார கட்டு சரஸ்வதி அம்மன் ஆகிய 3 சாமி சிலைகள் திருவனந்தபுரத்திற்கு தட்டு வாகனங்களில் புறப்பட்டு சென்றன. சுவாமி சிலைகள் செல்லும் வழி நெடுகிலும் ஏராளமான பக்தர்கள் கூடி நின்று மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu